நடன இயக்குநரும், நடிகரும், இயக்குநருமான ராகவா லோரன்ஸ் நடித்திருக்கும் ‘ருத்ரன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘பாடாத பாட்டெல்லாம்..’ எனும் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது.
தயாரிப்பாளராகயிருந்து முதன்முறையாக இயக்குநராக அவதாரமெடுக்கும் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் ‘ருத்ரன்’.
இதில் ராகவா லோரன்ஸ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார்.
இவர்களுடன் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் மற்றும் சாம் சி. எஸ். ஆகிய இருவரும் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.
இந்த திரைப்படத்தை ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் எல்எல்பி என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கதிரேசன் தயாரித்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ‘பாடாத பாட்டெல்லாம்..’ எனும் முதல் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது.1962 ஆம் ஆண்டில் வெளியான ‘வீரத்திருமகன்’ எனும் திரைப்படத்தில் எம் .எஸ் .விஸ்வநாதன் -ராமமூர்த்தி இசையில், கவியரசு கண்ணதாசன் எழுதிய ‘பாடாத பாட்டெல்லாம்..’ எனும் பழைய பாடல், தற்போதைய சூழலுக்கு ஏற்றவாறு மீளூருவாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது.
புதிதாக உருவாகியிருக்கும் பாடலை பாடகர்கள் சத்யப் பிரகாஷ், நித்யஸ்ரீ வெங்கட்ரமணன், எம் சி டி ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள்.
இந்தப் பாடலில் ராகவா லோரன்ஸின் நடனமும், இளம் ரசிகர்களை கவரும் றாப் இசையும் இணைந்து புது வடிவத்துடன் வெளியாகி இருப்பதால் ‘பாடாத பாட்டெல்லாம்..’ ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.