தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 17ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியான ‘பைசன் காளமாடன்’ எனும் திரைப்படம்- வணிக ரீதியாகவும் , விமர்சன ரீதியாகவும் பாரிய வெற்றியை பெற்று வசூலிலும் வெற்றி பெற்று வருவதால், இதனை சாத்தியமாக்கிய ரசிகர்களுக்கும், ஊடகங்களுக்கும் அப்படக் குழுவினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
இதற்காக சென்னையில் உள்ள நட்சத்திர ஹொட்டேலில் படக்குழுவினர் பங்கு பற்றிய பிரத்யேக நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ் திரையுலகில் இயக்குநராகவும், நடிகராகவும் உள்ள அமீர் முதன்முறையாக படக்குழுவினருடன் பங்கு பற்றினார்.
இந்நிகழ்வில் கதையின் நாயகனான துருவ் விக்ரம் பேசுகையில், ” இப்படத்திற்காக இயக்குநர் மாரி செல்வராஜுடன் ஒன்றரை ஆண்டுகாலம் பயணித்தேன். அவரைப் போல் கடினமாக உழைக்க கற்றுக்கொண்டேன். அவருடன் பழகிய அனுபவம் புதுமையானது. அவர் எனக்கு ஒரு பாடத்தை கற்பித்திருக்கிறார். அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திரைப்படத்தை வெற்றி படமாக்கிய ரசிகர்களுக்கும், ஊடகங்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
இதனிடையே இந்த திரைப்படம் வெளியான ஐந்து தினங்களுக்குள் இந்திய மதிப்பில் 35 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்து வருவதாகவும், விரைவில் 50 கோடி ரூபாய் வசூலை எட்டும் என்றும் திரையுலக வணிகர்கள் தெரிவித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

