யேமனில் இடம்பெற்றுவரும் மோதல்களில் காயமடைந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஐ.நா. விமானமொன்றின் மூலம் அங்கிருந்து வௌியேற்றப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது 50 கிளர்ச்சியாளர்கள் சிகிச்சைக்காக, யேமன் தலைநகர் சனாவிலிருந்து ஓமானுக்குக் கொண்டுசெல்லப்படவுள்ளனர்.
ஐ.நா. அனுசரணையுடன் கிளர்ச்சியாளர்களுக்கும் சவுதி தலைமையிலான அரசாங்கத்திற்கும் இடையே எதிர்வரும் நாட்களில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
யேமனில் கடந்த சில வருடங்களாக இடம்பெற்று வருகின்ற உள்நாட்டுப் போர் காரணமாக, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதோடு, இலட்சக்கணக்கான மக்கள் பட்டினியின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், ஐ.நா. விமானத்தில் காயமடைந்த 50 கிளர்ச்சியாளர்கள், யேமன் வைத்தியர்கள் மூவர் மற்றும் ஐ.நா. வைத்தியர் ஒருவர் ஆகியோர், சனா சர்வதேச விமான நிலையத்திலிருந்து மஸ்கட்டிற்குக் கொண்டுசெல்லப்படவுள்ளதாக, கூட்டணியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.