எமது நாட்டில் யுத்தம் முடிந்து சமாதானம் வந்து விட்டதாக பலர் கூறுகின்றார்கள். எமது மக்கள் என்ன கேட்டார்களோ அந்த நோக்கம் நிறைவேற்றப்படாமல் சமாதானம் மலர்ந்து விட்டதாக கூற முடியாது.
யுத்தமில்லை என்பது முழுமையான சமாதானம் என்று அர்த்தம் அல்ல என மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவான் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
சர்வதேச சமூகத்துடன் மிகவும் நெருங்கிய தொடர்பை கொண்டுள்ள இந்த கத்தோலிக்க சமூகம், சில விடயங்களை சர்வதேசத்திடம் எடுத்துக் கூற வேண்டும்.எமது மக்களுக்கு ஒரு தீர்வு கிடைத்தால் தான் அது எங்களுக்கு முழுமையான சமாதானமாக இருக்கும். இந்த வெளிப்பாடானது உங்கள் மூலமாகவும் சர்வதேசத்தைச் சென்றடைந்தால், சமாதானத்தை நோக்கிய எமது பயணத்திற்கு அது துணையாக இருக்கும்.
இலங்கையர் ஒருவரின் தற்போதைய தனிநபர் வருமானம் 3.842.3 அமெரிக்க டொலராக காட்டப்படுகின்றது. இது சர்வதேசத்தின் மத்தியில் இலங்கையை மத்திம வருமானம் பெறும் நாடாக உயர்த்தி காட்டியுள்ளது.
இப்படி தனிநபர் வருமானமுள்ள நாட்டுக்கு தொண்டு நிறுவனங்கள் பங்களிப்பு வழங்காது. இந்நிலை இன்னும் மிக மோசமாகி இலங்கையின் தனிநபர் வருமானம் 4,088 அமெரிக்க டொலராக அதிகரிக்கப் போகின்றது.
இதன் பின்னர் இலங்கைக்குள் எந்த நிதி நிறுவனங்களும் பணியாற்ற முடியாது. இது எங்களுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதற்கான அழுத்தமும் உங்கள் மூலமாக சர்வதேசத்திற்கு வழங்கப்பட வேண்டும்.
யுத்த காலத்தில் எகெட்- ஹரித்தாஸ் நிறுவனத்தின் பணி இன்றியமையாததாக அமைந்திருந்தது. குறிப்பாக கிராமப்புறங்களில் எமது தமிழ் மக்களின் உயிர்களை காப்பாற்றியதுடன், அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து பெரும் பணியாற்றிய பெருமையும் இந்த நிறுவனத்திற்கு உண்டு.
பெரும்பாலான அரச தன்னார்வ தொண்டு நிறுவனங்களினால் இந்த நாட்டில் பெரியளவிலான மாற்றங்கள் இடம்பெறுவதில்லை. யுத்தம் நிறைவடைந்த பின்பும் வறுமை நிலை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது, கல்வியின் தரம் குறைந்து கொண்டே செல்கின்றது.

