யுத்தத்தில் இறந்தவர்களை நினைவுகூருவதற்கு அனைவருக்கும் உரிமையுள்ளது ஆனால் வெற்றிவிழாவாகவும்,வெற்றிநாயர்களாகவும் காட்டிக்கொள்வது எந்த வகையிலும் அர்த்தமற்ற ஒன்று என மக்கள் போராட்ட முன்னணியின் ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்த அவர்இனவாதிகளிற்கு ஏற்றது போல இந்த அரசாங்கம் நகர்ந்து செல்கின்றது எனதெரிவித்துள்ளார்
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது-
கடந்த 2022 ம் ஆண்டு காலிமுகத்திடல் போராட்டத்தின் போது மே 18ம் திகதி முள்ளிவாய்;க்காலில் கொல்லப்பட்ட அனைவருக்குமான நினைவேந்தலை இன அழிப்பு நாளின் உடைய நினைவை,அங்கு ஏற்பாடு செய்திருந்தோம்.
அதன் தொடர்ச்சியாக நான்கு வருடங்களாக இந்த நிகழ்வு இடம்பெற்றுவருகின்றது, இந்த நிகழ்வு முதல் முறையாக காலிமுகத்திடலில் இடம்பெறும்போது,அங்கு முள்ளிவாய்க்கால் என்ற சொற்பதத்தை பயன்படுத்துவதற்கு அது சிலவேளைகளில் விடுதலைப்புலிகளை குறிக்கின்ற சொற்பதமாகயிருப்பதாகவும்,எதிர்ப்புகள் வெளிவந்த போதிலும் அந்த எதிர்ப்புகளை மீறி அந்த நாளில் நாங்கள் அந்த நிகழ்வை சிறப்பாக செய்திருந்தோம்.
அத்தோடு யுத்தவெற்றிவிழாவாக கொண்டாடப்படவிருந்த அந்த நாள் அன்று இரத்துச்செய்யப்பட்டது.
ஏனென்றால் ஒருநாட்டின் ஒரு பகுதி மக்கள் வடக்கிலே மிக மோசமான முறையிலே கொல்லப்பட்ட நிலையில்,பட்டினியில் இடப்பட்டும், குழந்தைகள் சிறுவர்கள் என பாராமல் அவர்கள்மீது கொத்துகொத்தாக குண்டுகளை போட்டு கொன்று,அந்த நாட்கள். அது மட்டுமன்றி வைத்தியசாலைகள்,பாதுகாப்பு வலயங்கள் என பிரகடனப்படுத்தப்பட்ட இடங்களிலே குண்டுதாக்குதல் மேற்கொள்ளப்பட்ட்டு மக்களிற்கு உணவில்லாமல் போதிய மருத்துவசதிகள் இல்லாமல்,துடிதுடிக்கவைத்த இந்த நாட்களை எந்த காரணம் கொண்டும் வெற்றிவிழாவாக அதே நாட்டில் இருக்கின்ற இன்னொரு பிரஜை கொண்டாடுவது என்பது சகித்துக்கொள்ள முடியாத ஒரு விடயம்.
மனித மாண்பிற்கே இழுக்கான விடயம் என்பதை நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றோம்.
அந்த வகையில் முள்ளிவாய்க்காலில் தொடர்ச்சியாக நினைவேந்தலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் மக்களிற்கு உதவிவழங்கும் விதத்தில்,நான்காவது தடவையாகவும் நாங்கள் இந்த நிகழ்வை கொழும்பில் ஏற்பாடு செய்திருந்தோம்.
வழமை போல அங்கும் சில இனவாதிகள் வந்து குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தார்கள்.இதனை விடுதலைப்புலிகள் சார்பாக நடைபெறும் என நிகழ்வு என அவர்கள் தரப்பிலிருந்து கூச்சல்கள் இட்டார்கள்.
இந்த கூச்சல்கள்,குழப்பத்திற்கான முக்கிய காரணம் இந்த நாட்டில் இருக்கின்ற இனவாதத்தை தூண்டிவிடுவது.
இனவாதத்தை தூண்டிவிடும் நடவடிக்கை என்பது தென்னிலங்கையில் ஒன்று முஸ்லீம்மக்கள் மேல் அல்லது தமிழ் மக்கள் மேல் தொடர்ச்சியாக நடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றது.
இந்த இனவாத செயற்பாடுகளிற்கு எதிராக ஒரு அரசாக இந்த அரசு போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பதுதான் எங்களின் குற்றச்சாட்டு.
ஏனென்றால் இனவாதிகளிற்கு ஏற்றது போல இந்த அரசாங்கம் நகர்ந்து செல்வது எந்த விதத்திலும் அர்த்தமுடையது அல்ல.
அனைவரையும் இந்த நாட்டு மக்களாக பார்க்கவேண்டும் என கருதும் அரசு இந்த நாட்டில் உள்ள ஒரு தரப்பு மக்கள் நினைவேந்தலையும் மற்றைய தரப்பு வெற்றிவிழாவை கொண்டாடுவதையும் முதலில் பார்க்கவேண்டும்.
ஏன் இப்படி வேறுபாடாகயிருக்கின்றது?இந்த வேறுபாட்டை களைவதற்கு என்ன செய்யவேண்டும் அவர்களின் உரிமையை நிலைநாட்டுவதற்கு என்ன செய்யவேண்டும்?தென்னிலங்கையில் கொழுந்துவிட்டெரியும் இந்த இனவாதத்தை கட்டுப்படுத்துவதற்கு என்ன செய்யவேண்டும் என்பது தொடர்பாக பாரியளவில் சிந்திக்கவேண்டிய தருணத்தில் இருக்கின்றோம்.
உங்களிற்கு தெரியும் மகிந்த ராஜபக்ச இந்த நாட்டை தொடர்ச்சியாக சூறையாடிக்கொண்டிருந்த தருணத்தில் இந்த நாட்டு மக்களை யுத்தத்தின் பால் ஈர்த்து யுத்தவெற்றிகளை காட்டித்தான் மக்களை தனது பக்கம் ஈர்த்துவைத்திருந்தார்.
அதேபோல இன்றும்,யுத்தவெற்றி வீரர்கள் நாள் அனுஷ்டிக்கப்படுகின்றது அந்த நாளிற்கு முதலில் ஜனாதிபதி செல்வதில்லை என்ற தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது பின்னர் அவர் செல்கின்றார்.
யுத்தத்தில் இறந்தவர்களை நினைவுகூருவதற்கு அனைவருக்கும் உரிமையுள்ளது ஆனால் வெற்றிவிழாவாகவும்,வெற்றிநாயர்களாகவும் காட்டிக்கொள்வது எந்த வகையிலும் அர்த்தமற்ற ஒன்று.
மே 2009ம் ஆண்டு இறுதி யுத்தம் இடம்பெற்றது அதிகளவான மக்கள் இலட்சக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள்.இது ஒரு இனஅழிப்பாக பார்க்கப்படுகின்றது.
இதற்கான பொறுப்புக்கூறலை எந்த ஒரு அரசும்,சரியான முறையில் ஏற்றுக்கொள்வதாக இல்லை, பொறுப்புக்கூரும் கடப்பாட்டை,அரசிற்குள்ளது. மக்கள் யாரும் இங்கு போரிட்டு இறந்த விடுதலைப்புலிகளிற்கான,கூரவில்லை, அவர்கள் அவர்களை வேறுவிதத்தில் நினைவுகூர்ந்தாலும் கூட மறுபக்கத்திலே,அவர்கள் பொறுப்புக்கூறல் என எதிர்பார்ப்பது இராணுவத்திடம் சரணடைந்து,காணாமலாக்கப்பட்ட தங்கள் உறவுகளிற்கு என்ன ஆனது?அதேபோல பொறுப்புவாய்ந்த அரசாங்கம் என கருதக்கூடிய இலங்கை அரசாங்கம் இலங்கையினுடைய மக்கள் குண்டுகளை போட்டு, கொன்று குவித்திருக்கின்றார்கள் அதற்கான பொறுப்புகூறலை யார் முன்வைப்பது என்ற கேள்வியும் அங்கிருக்கின்றது.