தியகம விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 63ஆவது தேசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டியின் இரண்டாம் நாளான இன்று திங்கட்கிழமை, பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி வீரர் சுசீந்திரகுமார் மிதுன்ராஜ் புதிய சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

18 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 3000 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் திகன ரஜவெல்லை இந்து தேசிய கல்லூரிக்கு இரண்டு தங்கப் பதக்கங்கள் கிடைத்துள்ளன.

23 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் 43.61 மீற்றர் தூரத்திற்கு தட்டை எறிந்து புதிய போட்டி நிகழ்ச்சி சாதனையை மிதுன்ராஜ் நிலைநாட்டினார்.
இலங்கை இராணுவம் சார்பாக பங்குபற்றி 2010இல் சரித் கப்புகொட்டுவவினால் நிலைநாட்டப்பட்டிருந்த 42.64 மீற்றர் என்ற போட்டி சாதனையையே மிதுன்ராஜ் புதுப்பித்துள்ளார்.
மிதுன்ராஜின் சக கல்லூரி வீரர் பிரேம்குமார் மிதுஷன் (35.32 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார்.
இதேவளை, 18 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 3000 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் திகன ரஜவெல்ல இந்து தேசிய கல்லூரிக்கு இரண்டு தங்கப் பதக்கங்கள் கிடைத்துள்ளன.

ஆண்களுக்கான 3000 மீற்றர் ஓட்டப் போட்டியை 9 நிமிடங்கள் 26.09 செக்கன்களில் நிறைவுசெய்த ரஜவெல்ல இந்து தேசிய கல்லூரி வீரர் எச். அபினேஷ் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
அப் போட்டியில் பதுளை சரஸ்வதி மத்திய கல்லூரி வீரர் கெ. திவாகர் (9:26.39 செக்.) வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
பெண்களுக்கான 3000 மீற்றர் ஓட்டப் போட்டியில் கண்டி திகன, இந்து தேசிய கல்லூரி வீராங்கனை என். அபிநயா தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார்.
இப் போட்டியை அவர் 11 நிமிடங்கள், 19.07 செக்கன்களில் நிறைவு செய்தார்.
இந்தப் போட்டிக்கு பெயர்பெற்ற வலல்ல ஏ. ரட்நாயக்க மத்திய கல்லூரி வீராங்கனையை விட கிட்டத்தட்ட 08 செக்கன்கள் வித்தியாசத்தில் அபிநயா வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.
இது இவ்வாறிருக்க ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற 23 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 10 கிலோ மீற்றர் வேகநடைப் போட்டியில் யாழ். மாவட்ட மெய்வல்லுநர் சங்கம் சார்பாக போட்டியிட்ட ரவிக்குமார் கௌஷியா (1:03:01.31 செக்.) வெள்ளிப் பதக்கம் வென்றார்.