யாழ். மண்டைதீவு காணியின் சட்ட ரீதியான உரிமையாளர்கள் தங்கள் சொந்த நிலத்தில் மீளக்குடியேறி வாழ முடியாதவாறு இதுவரை காலமும் கடற்படையினரால் தடுக்கப்பட்டு வந்த நிலையில், தமது காணிகள் என்றோ ஒரு நாள் விடுவிக்கப்படும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையிலேயே இன்னமும் வாழ்ந்து வருகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
யாழ். மண்டைதீவில் கடற்படையினர் வசமுள்ள தமிழ் மக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நேற்று கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,யாழ். மண்டைதீவு கிழக்கு பகுதியில் அமைந்துள்ள 29 தனிநபர்களுக்கு சொந்தமான 18 ஏக்கர், 01 றூட், 10 பேர்ச் விஸ்தீரணமுடைய காணியை கடற்படையினர் நீண்டகாலமாக கையகப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் தற்போது குறித்த தனியார் காணிகளை, காணி அமைச்சின் சட்டத்தின் கீழ் இலங்கை கடற்படையின் “வெலுசுமன” பிரதான முகாம் அமைப்பதற்காக சுவீகரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அறிய முடிகிறது.குறித்த காணியின் சட்ட ரீதியான உரிமையாளர்கள் தங்கள் சொந்த நிலத்தில் மீளக்குடியேறி வாழ முடியாதவாறு இதுவரை காலமும் கடற்படையினரால் தடுக்கப்பட்டு வந்த நிலையில், தமது காணிகள் என்றோ ஒரு நாள் விடுவிக்கப்படும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையிலேயே இன்னமும் அந்த 29 குடும்பங்களும், உறவினர், நண்பர்களின் காணிகளிலும், வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.பல்வேறுப்பட்ட பாதிப்புக்களோடு சொந்த நிலத்தில் குடியேறி வாழ முடியாத துர்ப்பாக்கிய நிலையில் அல்லல்படும் அந்த மக்களின் நம்பிக்கையை அடியோடு சிதைத்து மண்டைதீவு கிழக்கில் மக்கள் குடியேற்றத்திற்கு உகந்த நன்னீர்க் கிணறுகள் நிறைந்த தனியார் காணிகளை கடற்படையினர் நிரந்தரமாக கையகப்படுத்த நினைப்பது வேதனையளிக்கிறது.இவ்விடயம் தொடர்பாக பலதடவைகள் நாடாளுமன்றத்தில் எங்களால் குரல் எழுப்பப்பட்டும் அந்தக் குரல்களுக்கான நீதி கிடைக்கவில்லை.
அதேவேளை 2018.06.04 ஆம் திகதி யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பிலான பிரேரணை என்னால் முன்வைக்கப்பட்டதன் அடிப்படையில், மண்டைதீவு காணி சுவீகரிப்பை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு எதிர்ப்பதாகவும், நிராகரிப்பதாகவும் காணி அமைச்சினால் பிரதேச செயலாளர்களுக்கு சுவீகரிப்பு தொடர்பான கடிதங்கள் அனுப்பி வைக்கப்படும் போது அவை அரச அதிபருக்கு முன்னளிக்கப்பட்டு, மாகாண சபையின் காணி அமைச்சரிடம் சமர்பித்து அனுமதி பெற்றபின்பே நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்ற தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ள போதும் அவ்விடயம் தொடர்பில் முறையான நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை.