யாழ் போதனா வைத்தியசாலையில் புதிய அவசர சிகிச்சைப் பிரிவொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் முதல் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போது நேற்று முன்தினம் தெரிவித்தார். சுகாதாரம் குறித்த விடயம் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது கருத்து தெரிவிக்கையிலையே வைத்திய கலாநிதி இவ்வாறு குறிப்பிட்டார்.
இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ். போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவு அடுத்த மாதம் 17 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. அதற்கு மேலாக புதிதாக அமைக்கப்பட்டு வருகின்ற கட்டடத்துடன் அதனை நான்கு மாடியாக அமைப்பதற்குரிய நடவடிக்கைகளும் முன்னெடக்கப்பட்டுள்ளது. இதற்காக 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் அரியாலைப் பகுதியில் தனியார் ஒருவர் வைத்தியசாலைக்காக இரண்டு ஏக்கர் காணியை அன்பளிப்புச் செய்துள்ளார். அந்தக் காணியில் கண் வைத்தியசாலையை அமைப்பதற்குரிய நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

