யாழில் கேக் விற்பனை நிலையம் என்ற போர்வையில் மாவா போதைபொருள் விற்பனை செய்து வந்த நிலையத்தை பொலிஸார் முற்றுகையிட்டு சோதனை நடத்தியதில் 3 கிலோ மாவா போதைப்பொருளை மீட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்.ஐந்து சந்தி பகுதியில் கேக் விற்பனை நிலையம் என்ற போர்வையில் மாவா போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக யாழ்.பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று(செவ்வாய்கிழமை) மாலை குறித்த விற்பனை நிலையத்தை பொலிஸார் முற்றுகையிட்டு தேடுதல் நடத்தினர்.
இதன்போது குறித்த விற்பனை நிலையத்தில் இருந்து விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த மாவா போதை பொருள் 3 கிலோவை பொலிஸார் மீட்டுள்ளனர்.
அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
இதேவேளை, குறித்த விற்பனை நிலையத்திலிருந்து கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டு இருந்த பெருமளவான மாவா போதை கைப்பற்றப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.