யாழில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிலைமைகள் தொடர்பாக பிரதேசங்களில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வேலணை துறையூரில் இன்று (06) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய மக்கள் சக்தி கட்சியின் ஆதரவுக் குழு ஒன்றே குறித்த தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படுகின்றது.
காவல்நிலையத்தில் முறைப்பாடு
இது குறித்து மேலும் தெரியவருகையில், ”இன்று நாடளாவிய நடைபெறும் உள்ளூர் அதிகார சபை தேர்தல் தொடர்பில் வேலணை பிரதேசத்தின் கள நிலவரங்களை செய்தி சேகரிக்கும் நடவடிக்கையில் குறித்த ஊடகவியலாளர் ஈடுபடுட்டிருந்தார்.

இதன்போது வேலணை துறையூர் ஐயனார் வித்தியாலய வாக்காளர் மையத்தின் அருகே தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் இன்னொரு தரப்பு ஆதரவாளர்களுடன் கைகலப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் குறித்த சம்பவத்தை காணொளி பதிவு செய்து செய்தியாக சேகரித்துக் கொண்டிருந்த போதே குறித்த குழு ஊடகவியலாளரை தாக்கியுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் குறித்த ஊடகவியலாளரால் ஊர்காவற்றுறை காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.