யாழ்ப்பாணம் கொடிகாமத்தில் கிணறு வெட்டிய மண்ணை , வெள்ளம் தேங்கும் இடத்தில் கொட்டிக்கொண்டிருந்த இளைஞன் மீதே காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடாத்தியதாக இளைஞனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை இளைஞனின் தந்தை ஒரு மாத காலத்திற்கு முன்பாக நோய் வாய்ப்பட்டு உயிரிழந்து விட்டதாகவும், இளைஞனே உழைத்து குடும்பத்தினரை பார்த்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஆபத்தான நிலையில் யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சை
கொடிகாமம் பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் , அப்பகுதியை சேர்ந்த மாணிக்கவாசகர் மதுசன் (வயது 18) என்ற இளைஞரே படுகாயமடைந்து, ஆபத்தான நிலையில் , யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த சம்பவம் தொடர்பில் , படுகாயமடைந்த இளைஞனின் உறவினர்கள் தெரிவிக்கையில்,
அப்பகுதியில் கிணறு ஒன்று தோண்டப்பட்டு வருவதாகவும் , அங்கு சேர்ந்த மண்ணை , அருகில் உள்ள கடை ஒன்றின் முன்பாக வெள்ள நீர் தேங்கி நிற்பதனால் , அவ்விடத்தில் அதனை கொட்டுவதற்காக உழவு இயந்திரத்தில் ஏற்றி வந்து அந்த மணலை பறித்துக்கொண்டு இருந்தவேளையே கடற்கரையில் நின்று காவல்துறையினர் இளைஞன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.
துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள வேண்டிய தேவை இல்லை
காவல்துறையினர் அவ்விடத்தில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள வேண்டிய தேவை இல்லை. சந்தேகம் எனில் அருகில் வந்து விசாரணை செய்திருக்கலாம்.

உழவு இயந்திரத்தில் தப்பி செல்ல முற்பட்டவர் மீது துப்பாக்கி பிரயோகம் செய்தோம் என தற்போது காவல்துறையினர் கூறுகின்றனர் . உழவு இயந்திரம் மணிக்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்க கூடிய வாகனமா ? அதில் மணலை ஏற்றியவாறு தப்பியோட முடியுமா ? தற்போது காவல்துறையினர் கூறுகின்றனர் இலகுவாக துரத்தி பிடித்து விடுவார்கள்.
உழவு இயந்திரத்தின் பக்கவாட்டில் இருந்தே துப்பாக்கி பிரயோகம்
ஆனால் அதனை செய்யாது கிணறு வெட்டிய களிமண்ணை பறித்துக்கொண்டு இருந்த உழவு இயந்திரம் மீதே சரமாரியாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
உழவு இயந்திரத்தை துரத்தி சுடுவது எனில் பின் பகுதியில் இருந்தே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் உழவு இயந்திரத்தின் பக்கவாட்டில் இருந்தே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உழவு இயந்திரத்தின் சில்லுகளில் பக்க வாட்டில் இருந்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட அடையாளங்கள் காணப்படுகின்றன என்றனர்.

