ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, பொதுச் சின்னத்தில் களமிறங்கினால் மட்டுமே, அந்தக் கட்சியுடன் கூட்டணி அமைத்துக்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
குருநாகலில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பல்வேறு சந்தர்ப்பங்களில் பின்னடைவை சந்தித்திருந்தாலும், அக்கட்சியின் மக்கள் நேய செயற்பாடுகளினால் அழிவை சந்திக்கவில்லை எனத் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பலவீனமடைந்திருப்பதாக எவர் கூறினாலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாதென்றும், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதியாக ஆட்சி பீடத்தில் அமர நினைக்கும் எந்த வேட்பாளராக இருந்தாலும் அவர்களுக்கு சுதந்திரக் கட்சியின் ஒத்துழைப்பு அவசியமாகும் என்றும் கூறினார்.
அந்தவகையில், இலங்கையின் எதிர்க்கால ஜனாதிபதியை தீர்மானிக்கும் சக்தியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே உள்ளதெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
தற்போது காணப்படும் அரசியலமைப்பின்படி எதிர்காலத்தில் அதிகாரமற்ற ஜனாதிபதி ஒருவரை தேர்ந்தெடுப்பதைவிட அதிகாரமுள்ள அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் என்றும் இதன் ஊடாக 2020ஆம் ஆண்டு நாடாளுமன்ற அதிகாரத்தை கைப்பற்றுவதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இலக்கு எனவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
தனித்து போட்டியிடாமல் கூட்டணி அரசாங்கத்தின் ஊடாக அந்த இலக்கினை அடைந்துகொள்வதற்கு திட்டமிட்டு செயற்பட்டு வருவதாக தெரிவித்த ஜனாதிபதி, இலங்கையை புதிய பாதையில் கொண்டு செல்ல இலஞ்சம், ஊழல் அற்ற மற்றும் அந்நிய நாட்டு சக்திகளுக்கு தலை வணங்காத நாட்டை கட்டியெழுப்புவது புதிய அரசாங்கத்தின் நோக்கம் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தனக்கும் உள்ள முரண்பாடுகளானது, தனிப்பட்ட பிரச்சினை இல்லை எனவும் அது ஊழலுக்கும் இலஞ்சத்திற்கும் எதிரான மோதல் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
அத்தோடு, மஹிந்த ராஜபக்ஷ எதிர்க்கட்சி தலைவராக செயற்படுவதற்கும் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் நாடாளுமன்றில் இருப்பதற்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பே காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைக்கும் நோக்கிற்கும் தீங்கு விளைவிக்கும் வகையிலோ அல்லது கட்சியின் உறுப்பினர்களின் எதிர்காலத்தை கேள்விகுறியாக்கும் எந்தவொரு வேலைத்திட்டத்தையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் முன்னெடுக்காது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அந்தவகையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொதுச் சின்னத்தில் களமிறங்கினால் மட்டுமே, கூட்டணி சாத்தியப்படும் என்றும் அவர் இதன்போது கூறினார்.

