மே 8 ஆம் திகதி, இரண்டாம் உலகப்போரின் இறுதி நாள் என அடையாளப்படுத்தப்பட்டு, அதன் நினைவு நாள் இன்று காலை சோம்ப்ஸ்-எலிசேயில் கொண்டாடப்பட்டது.
மே 8, 1945 ஆம் வருடம் ஜெர்மனியின் நாசி துருப்புக்கள் சரணடைந்த நாளை இரண்டாம் உலகப்போரின் இறுதி நாள் என அடையாளப்படுத்தப்பட்டு, வருடா வருடம் வீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வு இடம்பெற்று வருகிறது. இன்று காலை சோம்ப்ஸ்-எலிசேக்கு வருகை தந்த ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், பிரதமர் எத்துவா பிலிப் மற்றும் பல அரசியல் தலைவர்கள் அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டனர். இரண்டாம் உலகப்போரின் ஒப்பற்ற வீரரும், படைத்தளபதியும், பின்நாளில் பிரான்சின் ஜனாதிபதியுமாகிய சாள்-து-கோல் அவர்களின் சிலைக்கு முன்னால் மூவர்ணத்தினாலான மலர்மாலை வைக்கப்பட்டு, அஞ்சலி செலுத்தினர்.
அதைத் தொடர்ந்து, Arc de Triomphe சென்ற மக்ரோன், ‘பெயர் தெரியா மாவீரன்!’ (Tombe du soldat inconnu) நினைவிடத்தில் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.