நாடு வங்குரோத்து நிலைமையினை அடைந்து விட்டது. நாட்டில் டொலருமில்லை, ரூபாவுமில்லை. மெழுகுவர்த்தி ஏற்றி சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலை மேம்படுத்த முடியாது என்பதை ஆட்சியாளர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எரிபொருள் நெருக்கடி நாளுக்கு நாள் தீவிரமடைந்து செல்கிறது. எரிபொருள் பற்றாக்குறை காரணமாக மின்னுற்பத்தி நிலையங்களின் நடவடிக்கை பாதிக்கப்பட்டதால் தினசரி நாடுதழுவிய ரீதியில் மின்விநியோகம் துண்டிக்கப்படுகிறது.
எண்ணெய் கப்பல்களுக்கு டொலர் செலுத்த முடியாத நெருக்கடியை அரசாங்கம் எதிர்க்கொண்டுள்ளது.
நாட்டில் தற்போது டொலருமில்லை,ரூபாவுமில்லை. நாடு வங்குரோத்து நிலைமையினை அடைந்து விட்டது. மின்விநியோக துண்டிப்பால் சுற்றுலாத்துறை சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
மெழுகுவர்த்தி ஏற்றி சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலை மேம்படுத்த முடியாது என்பதை ஆட்சியாளர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.
டொலர் நெருக்கடி தீவிரமடைந்துள்ள காரணத்தினால் அரச நிறுவனங்களுக்கு கடன் வழங்குதலை அரச வங்கிகள் மறுத்துள்ளன.
மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் பதவிக்கு வந்த போது பொருளாதாரத்தை சீரமைக்கும் கொள்கை திட்டங்களும்,நடவடிக்கைகளும் உள்ளடக்கிய 6 மாத கொள்கையினை முன்வைத்தார்.
மத்திய வங்கியின் ஆளுநர் முன்வைத்த 6மாத கொள்கை திட்டம் மறக்கடிக்கப்பட்டுள்ளது.பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை மத்திய வங்கியின் ஆளுநர் தற்போது தான் விளங்கிக்கொண்டுள்ளார்.
அத்தியாவசிய பொருள் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது.மருந்து பொருட்களின் இறக்குமதியை அரசாங்கம் மட்டுப்படுத்தியுள்ளது.
நெருக்கடியான நிலைமை குறித்து நாட்டு மக்கள் அவதானம் செலுத்த வேண்டும்.அரசாங்கம் தான்தோன்றித்தனமாக செயற்படுகிறது.
விவசாயத்துறை பாதிக்கப்பட்டுள்ளதால் நாட்டின் உணவு பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது. எதிர்வரும் காலங்களில் பாரிய நெருக்கடியை முழு நாடும் எதிர்க்கொள்ள நேரிடும் என்றார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]