மும்பை கமலா மில்ஸ் காம்ப்ளெக்ஸ் தீ விபத்து தொடர்பாக, அந்தக் கட்டடத்தில் செயல்பட்டுவந்த தனியார் ஹோட்டல் மேலாளர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மும்பை சேனாபதி மார்க் பகுதியில் உள்ள கமலா மில்ஸ் வணிக வளாகத்தில், கடந்த 29-ம் தேதி அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. அந்தக் கட்டடத்தின் மேல் தளத்திலிருந்து பரவிய தீயால், அந்தப் பகுதி முழுவதும் கரும்புகை எழுந்தது. இதில், மூச்சுத்திணறல் ஏற்பட்டு 14 பேர் உயிரிழந்தனர். 19-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். மும்பை மாநகராட்சி, அந்தப் பகுதியில் உள்ள சட்டவிரோதமான ஆக்கிரமிப்புகளை அகற்றாததே, தீ விபத்தால் அதிக பாதிப்பு ஏற்படக் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. தீ விபத்துக்குப் பின்னர் விழித்துக்கொண்ட மும்பை மாநகராட்சி, அந்தப் பகுதியில் இருந்த சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றி நடவடிக்கை எடுத்தது.
கமலா மில்ஸ் வணிக வளாகத்தில் இருந்த மோஜோ (Mojo) மற்றும் ஒன் அபவ் (1Above) என்கிற இரண்டு ஹோட்டல்களும் தீ விபத்துக்குக் காரணம் என ஒருவரை ஒருவர் மாறிமாறி குற்றம் சாட்டினர். இரண்டு ஹோட்டல்களின் உரிமையாளர்களும் விபத்து தொடர்பாக விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில், தீ விபத்து தொடர்பாக ஒன் அபவ் ஹோட்டலின் மேலாளர்கள் இருவரை மும்பை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.