முன்னாள் போராளி மர்மமானமுறையில் உயிரிழப்பு.!
வவுனியா – நெடுங்கேணிப் பகுதியில் முன்னாள் போராளி ஒருவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெடுங்கேணி குழவிசுட்டான் பகுதியில் வசித்து வந்த முன்னாள் போராளி ஆசீர்வாதம் ஸ்ரிபன் (வயது 36) என்பவரே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
“இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஆசீர்வாதம் ஸ்ரிபன் யாழ்ப்பாணத்திலிருக்கும் தனது உறவினரின் வீட்டிற்கு செல்வதற்கு நேற்று மாலை புளியங்குளம் சந்தியில் பஸ் தரிப்பிடத்தில் காத்திருந்தார்.
இதன்போது ஆசீர்வாதம் ஸ்ரிபன் திடீரென மயக்கமுற்று கீழே விழுந்துள்ளார். பின்னர் உடனடியாக புளியங்குளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து, மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு எடுத்து செல்லும் வழியில் இவர் உயிரிழந்துள்ளதாகவும் தற்போது சடலம் வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் வவுனியா வைத்தியசாலை செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.