8ஆவது இருபது 20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் குழு 1 க்கான இரண்டாவது சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் முன்னாள் சம்பியன் இங்கிலாந்தை ஆப்கானிஸ்தான் எதிர்த்தாடவுள்ளது.
இப் போட்டி பேர்த் விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 4.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் இந்த இரண்டு அணிகளினதும் பெறுபேறுகள் சிறப்பாக இருந்தது எனக் கூறுவதற்கில்லை.
இங்கிலாந்து விளையாடிய 21 போட்டிகளில் 10 இல் மாத்திரமே வெற்றிபெற்றுள்ளதுடன் ஆப்கானிஸ்தான் 15 போட்டிளில் 8இல் வெற்றிபெற்றுள்ளது. இலங்கைக்கு எதிராக ஆசிய கிண்ணத்தில் ஈட்டிய வெற்றி மாத்திரமே ஆப்கானிஸ்தானின் சிறந்த வெற்றியாக அமைந்துள்ளது.
எவ்வாறாயினும் அவுஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு எதிராக இங்கிலாந்து ஈட்டிய வெற்றிகள் அவ்வணிக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.
இந்த வருடம் இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்திய ரீஸ் டொப்லே உபாதைக்குள்ளானமை இங்கிலாந்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டமும் பந்துவீச்சும் சமபலம் வாய்ந்ததாக இருப்பதால் ஆப்கானிஸ்தானுக்கு நெருக்கடி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இன்றைய போட்டி இரண்டு அணிகளினதும் சுழல்பந்துவீச்சாளர்ளுக்கு இடையிலான போட்டியாக அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
அணித் தலைவர் ஜொஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ், பென் ஸ்டோக்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன் ஆகியோர் துடுப்பாட்டத்திலும் கிறிஸ் வோக்ஸ், கிறிஸ் ஜோர்டன், ஆதில் ராஷித், மொயின் அலி ஆகியோர் பந்துவீச்சிலும் திறமையை வெளிப்படுத்தினால் இங்கிலாந்தினால் வெற்றிபெறக்கூடியதாக இருக்கம்.
மறுபுறத்தில் ஆப்கானிஸ்தான் அணியும் சமபலம் வாய்ந்ததாகவே தென்படுகிறது.
அணித் தலைவர் மொஹமத் நபி, ரஹ்மானுல்ல குர்பாஸ், ஹஸ்ரத்துல்லா ஸஸாய், நஜிபுல்லா ஸத்ரான், இப்ராஹிம் ஸத்ரான் ஆகியோர் துடுப்பாட்டத்தில் திறமையை வெளிப்படுத்தக்கூடியவர்கள்.
ராஷித் கான், முஜிப் உர் ரஹ்மான் ஆகிய இரண்டு சுழல்பந்துவீச்சாளர்களும் இன்றைய போட்டியில் இங்கிலாந்துக்கு பெரும் சவால் விடுப்பர் என கருதகப்படுகிறது.
அணிகள்
இங்கிலாந்து: ஜொஸ் பட்லர் (தலைவர், அலெக்ஸ் ஹேல்ஸ், பென் ஸ்டோக்ஸ், லியாம் லிவிங்ஸ்டன், ஹெரி ப்றூக், மொயீன் அலி, சாம் கரன், கிறஸ் வோக்ஸ், கிறிஸ் ஜோர்டன், ஆதில் ராஷித், மார்க் வூட்.
ஆப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ், ஹஸ்ரத்துல்லா ஸஸாய், நஜிபுல்லா ஸத்ரான், இப்ராஹிம் ஸத்ரான், உஸ்மான் கானி, மொஹமத் நபி (தலைவர்), பரீத் அஹ்மத் மாலிக், ராஷித் கான், நவீன் உல் ஹக், முஜீப் உர் ரஹ்மான், பஸால்ஹக் பாறுக்கி.