முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைதுசெய்வதற்காக அவருடைய இரு இல்லங்களுக்கும் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் சென்றுள்ளதாகவும், இருப்பினும், அவர் இரு இல்லங்களிலும் காணப்பட வில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அவரைக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்யவுள்ளதாகவும் அது தொடர்பில் கொழும்பு நீதிவான் நீதிமன்றின் உத்தரவும் உள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சபாநாயகருக்கு ஏற்கனவே அறிவித்த பின்னரே முன்னாள் அமைச்சர் ராஜிதவின் வீட்டுக்குச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
முன்னாள் அமைச்சர் ராஜிதவின் வீடு மற்றும் அவர் மறைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் மேலும் சில இடங்கள் என்பவற்றையும் சோதனைக்குட்படுத்தியதாகவும், அவர் அவ்விடங்களில் இருக்கவில்லை எனவும் விசாரணைகளுக்கு பொறுப்பான சி.ஐ.டி.யின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மற்றும் பேருவளையிலுள்ள அவருடைய வீடுகளிலேயே இவ்வாறு தேடுதல் நடாத்தப்பட்டுள்ளதாகவும், அவரது மகன் சதுர சேனாரத்னவிடமும் தந்தை தொடர்பில் கேட்டதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
தன்னைக் கைது செய்வதை தடுக்குமாறு உத்தரவிடக் கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பு மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள முன்பிணை மனு எதிர்வரும் 30 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

