வட கொரியாவுடன் அடுத்த கட்ட பேச்சு வார்த்தைகள் தோல்வி அடைந்தால் மீண்டும் தென் கொரியாவுடன் இணைந்து போர் பயிற்சு தொடங்கப்படும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் கடந்த 12ஆம் தேதி வரலாற்று சிறப்பு மிக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – வட கொரிய அதிபர் கிம் சந்திப்பு நடந்தது. மிகவும் இணக்கமாக நடந்த இந்த சந்திப்பில் ஒரு கூட்டு ஒப்பந்தம் கையெழுத்திடப் பட்டது. இரு நாட்டு தலைவர்களும் இந்த சந்திப்பு திருப்தி அளித்ததாக தெரிவித்தனர். அத்துடன் தென் கொரியாவுடனான தனது ராணுவப் பயிற்சியை நிறுத்தப் போவதாக அமெரிக்கா அறிவித்தது.
வட கொரியாவும் அமெரிக்காவும் அடுத்தடுத்து பேச்சு வார்த்தைகள் நடத்த உள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில், “நான் வட கொரிய அதிபருடன் நடத்திய பேச்சு வார்த்தையில் தென் கொரியாவுடன் போர் பயிற்சியை நிறுத்துவது குறித்த யோசனையை முன் வைத்தேன். அந்த பயிற்சியால் செலவு அதிகம் ஆவதுடன், அந்த பயிற்சி மீது சந்தேகமும் உண்டாகிறது.
அதனால் நான் பயிற்சி நிறுத்தம் குறித்த யோசனையை வெளியிட்டேன். ஆனால் வட கொரியாவுடன் அடுத்தடுத்த கட்ட பேச்சு வார்த்தைகள் தோல்வி அடையும் என்றால் நாங்கள் உடனடியாக தென் கொரியாவுடன் போர் பயிற்சியை தொடங்குவோம்” என பதிந்துள்ளார்.

