அமெரிக்காவின் ஹியூஸ்டன் நகரில் கடத்தப்பட்ட நபரை மீட்கவேண்டிய மத்தியப் புலனாய்வுப் பிரிவு அதிகாரியே அவரைத் தவறுதலாகச் சுட்டுக் கொன்றார்.
கடந்த வியாழக்கிழமை அந்தத் துயரச் சம்பவம் நடந்தது.
கடத்தலுக்கான காரணம், எந்தச் சூழலில் கடத்தப்பட்டவர் தவறுதலாக சுடப்பட்டார் என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.
கடந்த புதன்கிழமை அந்த நபர் அவருடைய வீட்டிலிருந்து கடத்தப்பட்டதாகத் தகவல் வெளியானது.
வேறொரு வீட்டில் அவர் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.
கடத்தப்பட்ட நபரின் சகோதரருக்குப் பிணைப்பணம் கேட்டு மிரட்டல் அழைப்பு வந்ததாகவும் கூறப்பட்டது.
உடனடியாகக் காவல்துறைக்கும் மத்தியப் புலனாய்வுப் பிரிவுக்கும் தகவல் அளிக்கப்பட்டது.
அதிகாலை 4 மணிக்கு முன்னர் அந்த நபர் சுடப்பட்டதாக மத்தியப் புலனாய்வுப் பிரிவின் பேச்சாளர் தெரிவித்தார்.
மருத்துவமனையில் அவர் மாண்டார்.
இரண்டு ஆடவர்களும் ஒரு பெண்ணும் கடத்தல் சம்பவத்தின் தொடர்பில் கைதாயினர்.
கடத்தப்பட்ட நபரைத் தவறுதலாகச் சுட்ட அதிகாரி விடுப்பில் உள்ளார். விசாரணை தொடர்கிறது.