நடிகை வனிதா விஜயகுமார் – றொபட் மாஸ்ரர் இணைந்து நடித்திருக்கும் மிஸஸ் & மிஸ்டர் (Mrs & Mr) திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
‘சர்ச்சை நாயகி’ வனிதா விஜயகுமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும்’ மிஸஸ் & மிஸ்டர்’ (Mrs & Mr) திரைப்படத்தில் றொபட், வனிதா விஜயகுமார், சிறி மன், ஷகீலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன், செஃப் தாமு, கும்தாஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
டி. ராஜபாண்டி – விஷ்ணு ராமகிருஷ்ணன் – டி.ஜி. கபில் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார்.
ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வனிதா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜோவிகா விஜயகுமார் தயாரித்திருக்கிறார்.
ஜூனில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில் படக் குழுவினருடன் இயக்குநர் வசந்த பாலன், தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், நடிகை அம்பிகா ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.
இவ்விழாவில் நடிகை அம்பிகா பேசுகையில், ” இந்த படத்தின் டைட்டிலை தெரிவு செய்தது நான்தான். அதனால் ஒரு சந்தோஷம். இப்படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டத்தை பார்த்தேன். பொழுதுபோக்கு அம்சங்களுடன் இருக்கிறது.
இப்போது உள்ள சூழலில் ஒரு படத்தை தயாரிப்பது… இயக்குவது… என்பதெல்லாம் கடினமானது. அதுவும் ஒரு பெண்மணி செய்ய வேண்டும் என்றால்.. அதைவிட கடினம் .
அதிலும் இது போன்றதொரு கதையை எழுதி இயக்குவது என்பது அதைவிட கடினம். அதே சமயத்தில் இது போன்ற கதையை வனிதாவால் மட்டுமே இயக்க முடியும். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன் ”என்றார்.
இந்தத் திரைப்படத்தில் மத்திம வயதை எட்டிய தம்பதிகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளையும், அதனை அவர்கள் எதிர்கொள்ளும் விதத்தையும் குறித்து ஜனரஞ்சகமாக சொல்லி இருக்கிறார்கள்.
தற்போதைய தலைமுறையினருக்கு இந்த படம் மிகவும் பிடிக்கும் என்பதால் இந்த படம் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திரைப்படம் இது வரும் ஜூன் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.