“மிதிகம லசா” என அழைக்கப்படும் வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்கிரமசேகர ஹேவத் என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிகள் பயணித்த மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“மிதிகம லசா” என அழைக்கப்படும் வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்கிரமசேகர ஹேவத் என்பவர் கடந்த ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி காலை வெலிகம பிரதேச சபை அலுவலகத்தில் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் “மிதிகம லசா” படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் சிலர் கைதுசெய்யப்பட்டனர்.
இந்நிலையில், இது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் மேலதிக விசாரணைகளுக்கு அமைய துப்பாக்கிதாரிகள் பயணித்த மோட்டார் சைக்கிள் கதிர்காமம் – புத்தல வீதியில் 16 ஆவது மைல்கல் பகுதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிதாரிகள் இருவரும் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு அம்பலாந்தோட்டை பிரதேசத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று பின்னர் கதிர்காமம் – புத்தல வீதி ஊடாக பயணிக்கும் போது மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டுச் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

