தமிழ் மக்களின் காவல் தெய்வங்களாகப் போற்றப்படும் மாவீரர்களை நினைவுகூர அனுமதிக்க முடியாது எனக் கூறும் அதிகாரத்தை இராணுவத் தளபதிக்கு யார் வழங்கியது என்று கேள்வஎழுப்பியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா.
அநுராதபுரத்தில் வைத்துக் கருத்துக் கூறியிருந்த இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க, மாவீரர்களை நினைவுகூர அனுமதிக்க முடியாது. போரில் இறந்தவர்களை மாத்திரமே தமிழ் மக்கள் அஞ்சலிக்க முடியும் என்று கூறியிருந்தார்.
அது தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் தெரிவித்தாவது-
இந்த நாடு மக்களாட்சி நாடு என்று கூறுகின்றனர். அதிலும் அமைச்சர் ஒருவர் 5 நட்சத்திர மக்களாட்சி நாடு என்று மார்தட்டுகின்றார். ஆனால் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் நிகழ்வொன்றைத் தடைசெய்வது மக்களாட்சிக்கு விரோதமான செயல். அதை இராணுவம் முடிவெடுத்துச் செயற்படுத்த முனைவது பாரதூரமானது.
இராணுவமே இந்த விடயத்தில் முடிவெடுக்கும் என்றால் நாட்டில் தற்போது நடைபெறுவது மக்களாட்சி அல்ல, இராணுவ ஆட்சியே என்று அறிவியுங்கள். இராணுவத் தளபதி முடிவெடுக்க முடியும் என்றால் அரச தலைவர், தலைமை அமைச்சர், நாடாளுமன்றம் எதற்கு?
முப்படைகளுக்குப் பொறுப்பாக அரச தலைவர் உள்ளநிலையில் இராணுவத் தளபதி வெளியிட்டுள்ள கருத்துக்கு யார் பொறுப்பு?. இந்த ஆண்டு மாவீரர் நாள் நிகழ்வுகள் அனுமதிக்கப்படாது என்றால் கடந்த இரு ஆண்டுகளும் அனுமதிக்கப்பட்டமை பன்னாட்டுச் சமூகத்தை ஏமாற்றுவதற்கே என்பதை இராணுவத் தளபதி பகிரங்கமாக ஒப்புக்கொள்ள வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரச தலைவர் மற்றும் தலைமை அமைச்சருடன் கலந்துரையாடி இந்த விடயத்தில் உரிய தீர்வைப் பெற்றுக்கொள்ளும். தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய கடப்பாடு அரசுக்கு உண்டு. அதை விடுத்து இராணுவத்தினரைப் பேச விட்டு மக்களைக் கொதிநிலைக்குக் கொண்டு செல்லக் கூடாது.- என்றார்.