உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
மாகாண சபைகளை காணாமல் போக செய்துள்ளனர்

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதை தேர்தல் ஆணைக்குழு எதிர்க்கின்றது. செப்டம்பர் மாதத்திற்கு பின்னர், தேர்தல் நடத்துவது தொடர்பான அறவிப்பை வெளியிடும் அதிகாரம் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளது.
மாகாண சபைகளும் தற்போது அதிகாரிகளின் கீழ் இயங்கி வருகிறது. மக்கள் பிரதிநிதிகள் இருக்க வேண்டிய இடங்களில் அதிகாரிகளை பயன்படுத்தி நிர்வாகம் செய்வதை ஆணைக்குழு ஏற்காது. மாகாண சபைகள் காணாமல் போய்விடவில்லை, அதனை காணாமல் போக செய்துள்ளனர் எனவும் புஞ்சிஹேவா கூறியுள்ளார்.
இதனிடையே சுதந்திர மக்கள் சபையின் உறுப்பினர்கள் சிலர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு சென்று அதன் தலைவர் நிமல் புஞ்சிஹேவாவை இன்று முற்பகல் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின் போதே அவர் மேற்கண்ட கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
சட்டப்படி தேர்தலை நடத்தியே ஆகவேண்டும்

இதன் போது கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சரித்த ஹேரத், எதிர்கால தேர்தல்களில் போட்டியிடும் விதம் சம்பந்தமாக கலந்துரையாட தேர்தல் ஆணைக்குழுவிற்கு சென்றதாக கூறியுள்ளார்.
அதேவேளை சட்டத்திற்கு அமைய தேர்தல் ஒன்றை நடத்தியே ஆகவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் கூறியுள்ளார். போலியான காரணங்களை முன்வைத்து தேர்தலை ஒத்திவைக்க முடியாது. தேர்தல் ஆணைக்குழுவுடன் இது சம்பந்தமாக முழுமையான பேச்சுவார்த்தைகளை நடத்த எண்ணியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.