நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘சொப்பன சுந்தரி’ எனும் திரைப்படம் மார்ச் மாதம் வெளியாகும் என பட குழுவினர் அறிவித்திருக்கிறார்கள்.
இயக்குநர் எஸ். ஜி. சார்லஸ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘சொப்பன சுந்தரி’. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ், கருணாகரன், தீபா சங்கர், மைம் கோபி, ரெடின் கிங்ஸ்லி, லட்சுமி பிரியா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஜி. பாலமுருகன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தை ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஹியூபொக்ஸ் ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் பாலாஜி மற்றும் விவேக் ரவிச்சந்திரன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அண்மையில் இந்தப் படத்தின் ஓடியோ உரிமையை திங்க் மியூசிக் கைப்பற்றி இருக்கிறது. இந்நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் மார்ச் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக பிரத்யேக புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கிறார்கள்.
இதனிடையே ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருப்பதாலும், நகைச்சுவைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருப்பதாலும், ‘சொப்பன சுந்தரி’ எனும் கவர்ச்சிகரமான தலைப்பிற்காகவும் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.