மாநகர ஆணையாளர்கள்,பிரதேச சபை செயலாளர்களிடம் ஒப்படைக்கப்படும் உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகம் தொடர்பில் மாகாண ஆளுநர்கள் விசேட கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கும்,மாகாண ஆளுநர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (14) செவ்வாய்க்கிழமை மாலை அலரி மாளிகையில் இடம்பெற்றது.
உள்ளூராட்சி மன்றங்களின் பதவி காலம் நிறைவடைந்ததன் பின்னர் மன்றங்களின் நிர்வாகங்களை விசேட ஆணையாளர்களின் கீழ் பொறுப்பாக்கியதை தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் மாகாண ஆளுநர்களுக்கு தெளிவுப்படுத்த மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
காலி மாவட்டம் எல்பிடிய உள்ளூராட்சிமன்றத்தை தவிர ஏனைய உள்ளூராட்சி மன்றங்களின் பதவி காலம் எதிர்வரும் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நிறைவடையவுள்ளது.
இதற்கமைய மாநகர சபைகளின் நிர்வாகம் நகர ஆணையாளர்களிடமும்,நகர சபை,பிரதேச சபைகளின் நிர்வாகம் பிரதேச சபை செயலாளர்களிடம் பொறுப்பாக்கப்படும்.
அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் செயற்படுத்துவதற்கு உள்ளூராட்சி மன்ற நிர்வாக கட்டமைப்பு அத்தியாவசியமானது, ஆகவே மக்களுக்கான சேவையை உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக செயற்படுத்துவது குறித்து விசேட கவனம் செலுத்துமாறு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பிரதமர் தினேஷ் குணவர்தன சகல மாகாண ஆளுநர்களிடம் வலியுறுத்தினார்.
மாநகர ஆணையா ளர்கள்,பிரதேச சபை செயலாளர்களிடம் ஒப்படைக்கப்படும் உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகம் தொடர்பில் சகல ஆளுநர்களும் விசேட கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள்,உறுப்பினர்கள் வசமுள்ள அரச சொத்துக்கள் மற்றும் அரச வாகனங்கள் அனைத்தும் எதிர்வரும் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமைக்கு முன்னர் உரிய அரச நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
மார்ச் 19 ஆம் திகதிக்கு முன்னர் அரச சொத்துக்கள் மற்றும் அரச வாகனங்களை உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்துவார்களாயின் அது சட்டவிரோத செயற்பாடாக கருதப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு அறிவித்துள்ளது.