மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்தில் நடத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன, என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
தேர்தல்கள் திணைக்களத் தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
மாகாண சபைத் தேர்தல் செப்ரெம்பர் மாதத்தில் நடத்தப்பட வாய்ப்புக்கள் உள்ளன. அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப் பட்டு வருகின்றன. ஆனால், அந்தத் தேர்தல் ஒரே தடவையில் நடத்தப்படுமா அல்லது தனித்தனி மாகாணங்களில் நடத்தப்படுமா என்பது குறித்த தீர்மானங் கள் எட்டப்படவில்லை.
நடந்துமுடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல், திருத்தம் செய்யப்பட்ட புதிய சட்டத்துக்கமைவாக இடம்பெற்றமையால் தேர்தலில் தெரிவான பெண் வேட்பாளர்களுக்கு ஆசனப் பங்கீட்டை வழங்கும் செயற்பாடுகளில் பெரும் நெருக்கடி நிலமை ஏற்பட்டுள்ளது.
தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்து 25 வீத பெண் பிரதிநிதித்துவம் கிடைக்காவிட்டா லும் சபைகளை நடத்திச்செல்ல முடியும் என்றவாறான திருத்தங்களைக் கொண்டுவரும் பட்சத்தில் மாத்திரமே முரண்பாடுகளைக் களையமுடியும்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலின் முழுமையான முடிவுகள் எதிர்வரும் 20ஆம் திகதி உரிய தரப்புகளுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளன.
இதன்போது தொகுதி மற்றும் விகிதாசார அடிப்படையில் பெறப்பட்ட முடிவுகள் அறிவிக்கப்படும். உள்ளூராட்சி சபைத் தேர்தல் பொது வாக்கெடுப்பு என்று சில தரப்புகளால் அர்த்தப்படுத்தப்படுகின்றது.
அரச தலைவர் தேர்தல், பொதுத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தலில் பெரும்பான்மையைப் பெற்று வெற்றிபெறும் தரப்புகள் இவ்வாறு கூறிக் கொள்ள முடியும்.
ஆனால், உள்ளூராட்சி சபைத் தேர்தலை அவ்வாறு அர்த்தப்படுத்துவது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள் எவ்வாறாக இருந்தாலும் தேர்தல் திணைக்களம் சுதந்திரமாகவே செயற்படும் — என்றார்.