சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐ.சி.சி.) புகழ்பூத்த வீரர்கள் பட்டியில் இலங்கையின் முன்னாள் அணித் தலைவர் மஹேல ஜயவர்தன இணைத்துக்கொள்ளப்பட்டார்.
ஐ.சி.சி. ஆடவர் இருபது 20 உலகக் கிண்ண இறுதிப் போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் அதற்கு முன்பு மஹேல ஜயவர்தனவுக்கு இந்த கௌரவம் கிடைத்துள்ளது.
மஹேல ஜயவர்தனவுடன் தென் ஆபிரிக்காவின் முன்னாள் அணித் தலைவர் ஷோன் பொல்லொக், இங்கிலாந்து மகளிர் டெஸ்ட் அணி வீராங்கனை ஜெனெட் ப்ரிட்டின் ஆகியோரும் ஐ.சி.சி.யின் புகழ்பூத்த வீரர்கள் பட்டியலில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இவர்கள் மூவரும் புகழ்பூத்தோர் பட்டியலில் ஏற்கனவே புகழ்பூத்தவர்கள் பட்டியலில் இடம்பெறும் மேற்கிந்தீவுகளின் ஜாம்பவான் க்ளைவ் லொய்டினால் உத்தியோகபூர்வமாக இணைத்துக்கொள்ளப்பட்டனர்.
இந்த வைபவம் இருபது 20 உலகக் கிண்ண இறுதிப் போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றது.
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் கிரிக்கெட் ஆற்றல்களை அபரிமிதமாக வெளிப்படுத்தும் ஜாம்பவான்களை கௌரவிக்கும் வகையில் புகழ்பூத்தோர் வீரர்கள் பட்டியல் 2009 இல் ஆரம்பிக்கப்பட்டது.
அன்று முதல் தற்பொதுவரை 106 வீரர்கள் இப் பட்டியலில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இலங்கையின் அதிசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான மஹேல ஜயவர்தன, 2014 ஐ.சி.சி. ஆடவர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் சம்பியனான இலங்கை அணியில் பிரதான வீரராக இடம்பெற்றார்.
தென் ஆபிரிக்காவில் உருவான அதிசிறந்த சகலதுறை வீரர் ஷோன் பொல்லொக் ஆவார்.
டெஸ்ட் மற்றும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் ஆகிய இரண்டுவகை கிரிக்கெட் போட்டிகளிலும் 3,000 ஓட்டங்கள், 300 விக்கெட்கள் என்ற அரிய மைல்கல்லை எட்டிய முதலாவது வீரர் ஷேன் பொல்லொக் ஆவார்.
ஐ.சி.சி.யின் புகழ்பூத்த வீரர்கள் பட்டியலில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதை அதி விசேட கௌரவமாக கருதுவதாக மஹேல ஜயவர்தன தெரிவித்தார்.
குமார் சங்கக்கார, முத்தையா முரளிதரன் ஆகியோரைத் தொடர்ந்து ஐசிசி புகழ்பூத்தோர் பட்டியலில் இடம்பெறும் மூன்றாவது இலங்கையர் மஹேல ஜயவர்தன ஆவார்.