ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் அதிகூடிய மொத்த ஓட்டங்களைக் குவித்தவர் என்ற சாதனையை விராத் கோஹ்லி நிலைநாட்டியுள்ளார்.
பங்களாதேஷுக்கு எதிராக அடிலெய்ட் ஓவல் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற இருபது 20 உலகக் கிண்ண குழு 2 சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் 16ஆவது ஓட்டத்தைப் பூர்த்தி செய்தபோது இந்த சாதனையை விராத் கோஹ்லி நிலைநாட்டினார்.
இதன் மூலம் இதற்கு முன்னர் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் மஹேல ஜயவர்தனவுக்கு சொந்தமாகவிருந்த 1016 ஓட்டங்கள் என்ற சாதனையை கோஹ்லி முறியடித்தார்.

மஹேல ஜயவர்தன 2007இலிருந்து 2014வரை விளையாடிய 5 இருபது 20 உலகக் கிண்ண அத்தியாங்களில் 31 இன்னிங்ஸ்களில் 1016 ஓட்டங்களைப் பெற்றார்.
ஆனால், விராத் கோஹ்லி 2012இலிருந்து 2022வரை 5 இருபது 20 உலகக் கிண்ண அத்தியாயங்களில் 23 இன்னிங்ஸ்களில் 1065 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.
இந்த வருட இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் 4 இன்னிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடிய கோஹ்லி முறையே 82 ஆ.இ., 62 ஆ.இ., 12, 64 ஆ.இ. ஓட்டங்களைப் பெற்று மொத்தமாக 220 ஓட்டங்களைக் குவித்து 220.00 என்ற சராசரியைக் கொண்டுள்ளார்.

