தாம் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் செய்து கொள்ளும் ஒப்பந்தம் குறித்து எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒழிவு மறைவின்றி தெளிவாக நாட்டுக்கு வெளிப்படுத்துவோம் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார்.
சிங்கள கிராமங்கள் மற்றும் விகாரைகளை இல்லாமல் செய்ய வேண்டும் என்று எம்மிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்திருப்பதாக சிங்கள பத்திரிகையொன்றில் வெளியாகியிருக்கும் செய்தி முற்றிலும் பொய்யானதாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தைப் போன்று நாங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் உதவியை ஒருபோதும் பெற்றுக்கொண்டதில்லை. புலிகளிடம் திரைமறைவில் நிதிபெற்று மஹிந்த 2005 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றதைப்போன்று நாம் செயற்பட்டதில்லை.
எம்முடைய தேர்தல் விஞ்ஞாபனத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி வெளியிடுவதற்கு எதிர்பார்த்திருக்கிறோம்.
அதனூடாக பிளவுபடாத ஒருமித்த நாட்டிற்குள் எவ்வித இன,மத பேதங்களுமின்றி அனைவரையும் ஒற்றுமையுடன் வாழச்செய்வதற்கான சஜித் பிரேமதாஸவின் தூரநோக்கு சிந்தனையை விளங்கிக்கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கிலுள்ள தமிழ் கட்சிகள் ஐந்து இணைந்து 13 அம்ச கோரிக்கையை தயார் செய்துள்ளது. இந்த கோரிக்கைக்கு ஆதரவு வழங்கும் ஜனாதிபதி வேட்பாளருக்கே தாம் ஆதரவு வழங்கவுள்ளதாக முன்னாள் வட மாகாண சபை முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

