அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் ஜனாதிபதியின் தீர்மானம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்த வேண்டும்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மக்களாணை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கைக்கு எதிரானது என்பதை ஆளும் தரப்பினர் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் சுதந்திர மக்கள் சபையின் பாராளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிடும் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் ஆளும் தரப்பினர் உள்ளார்கள்.
2019 மற்றும் 2020 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை முழுமையாக மறந்து விட்டார்கள்.
குறுகிய அரசியல் நோக்கத்துக்காக கொள்கையில்லாமல் செயற்படுகிறார்கள். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் மற்றும் பொருளாதார கொள்கைகளை நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் நாட்டுக்கு எதிரான கொள்கைகளை செயற்படுத்துகிறார்.
சர்வதேச நாணய நிதியம் பொருளாதார மீட்சிக்கான இறுதி தீர்வு என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் செயற்படுகிறது.வெளிநாட்டு கடன்களை மறுசீரமைக்க முன்னர் தேசிய கடன்களை மறுசீரமைக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த போவதில்லை என்று குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த பொதுஜன பெரமுனவினர் இன்று கொள்கைக்கு முரணாக செயற்படுகிறார்கள்.
இலங்கை மின்சார சபை,பெற்றோலிய கூட்டுத்தாபனம்,ஸ்ரீ லங்கன் எயார் லைன்,வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகிய அரச நிறுவனங்களை மறுசீரமைக்க வேண்டும் என அரசாங்கம் குறிப்பிடுகிறது.
நட்டமடையும் அரச நிறுவனங்களுடன் இணைத்து 52 அரச நிறுவனங்களையும் மறுசீரமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.52 அரச நிறுவனங்களின் பெயர்,சொத்து மதிப்பு தொடர்பில் முழுமையான தகவல்களை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்குமாறு நிதியமைச்சிடம் பலமுறை வலியுறுத்தினோம்.ஆனால் இதுவரை சாதகமான பதில் கிடைக்கவில்லை.
அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் ஜனாதிபதியின் தீர்மானம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்த வேண்டும்.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மக்களாணை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கைக்கு எதிரானது என்பதை ஆளும் தரப்பினர் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
மின்சார சபையை மறுசீரமைப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவினர் ‘உத்தேச மின்சார சபை மறுசீரமைப்பு’ சட்டமூலத்தை மின்சாரத்துறை அமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளார்கள்.
இந்த சட்டமூலத்தின் பல பரிந்துரைகளில் 1976 ஆம் ஆண்டு 17 ஆம் இலக்க சிலோன் மின்சார சபை சட்டம், 2009ஆம் ஆண்டு 20 ஆம் இலக்க ஸ்ரீ லங்கா மின்சார சட்டம் மற்றும் 2009 ஆம் ஆண்டு 35 ஆம் இலக்க சூரிய வளங்கள் பயன்பாட்டு சட்டம் மற்றும் 2009 ஆம் ஆண்டு 20 ஆம் இலக்க மின் திருத்தச் சட்டங்கள் ஆகிய சட்டங்களை முழுமையாக இரத்து செய்யும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்றார்.