வட,கிழக்கு பருவப்பயிற்சிக் காற்றின் மூலம் நாட்டின் பல பாகங்களிலும் நவம்பர் முதல் ஜனவரி மாத காலப்பகுதியில் மழை வீழ்ச்சி காணப்படுவது வழக்கமாகும். இக்காலப்பகுதியில் நாம் பல்வேறு தேர்தல்களை சந்தித்து அதுதொடர்பான பல அனுபவங்களையும் பெற்றுள்ளோம்.
அந்தவகையில், மழை காலத்தில் தேர்தலை நடாத்துவது பொருத்தமற்றது என தேசிய காங்கிரஸ் கருதுகிறது என தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தேசிய காங்கிரஸ் கடந்த வாரம் எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக அக்கட்சியின் கொள்கைபரப்புச் செயலாளர் சட்டத்தரணி எம்.எம்.பஹீஜ் தெரிவித்தார்.
மேலும் அவர் இதுதொடர்பில் தெரிவிக்கையில்,
குறிப்பாக பல காரணங்களை முன்வைத்தே தேசியங்கிரஸ் இக்கோரிக்கைகளை விடுத்துள்ளது.
இயற்கை அனர்த்தங்கள் மற்றும் அழிவுகள் ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களில் அரசியல் நடவடிக்கைகளை விட மக்களை காப்பற்றுவதற்கே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்றும், மழை காலத்தில் மக்களுக்கு ஏற்படுகின்ற தனிப்பட்ட அசௌகரிகங்கள் காரணமாக மக்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டாமல் இருப்பதும், மக்கள் வாக்களிப்பில் அக்கரை காட்டாமல் இருப்பதனையும் யாவரும் அறிவோம்.
குறிப்பாக அரசியல் கட்சிகள் முறையான தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத நிலை தோற்றுவிக்கப்படுவதனால் மக்களுக்கு சென்றடைய வேண்டிய செய்திகள் அவர்களைச் சென்றடையாத சந்தர்ப்பத்தில் சரியான தெரிவினை மக்கள் மேற்கொள்ள முடியாமலுள்ளது.
இயற்கை அழிவுகளினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகளை தமக்கு சாதகமாக பயன்படுத்தி உலர் உணவுகள், நிவாரணங்கள் வழங்குவதன் மூலம் வேட்பாளர்கள் மக்களின் வாக்குகளை கபளீகரம் செய்வதற்கு சந்தர்ப்பங்கள் காணப்படுகிறது. இது தேர்தல் சட்டங்களை மீறுவதுடன் வேட்பாளர்களிடையில் சமனற்ற போட்டி நிலையை உருவாக்குகிறது.
எனவே இவற்றை தவிர்ப்பதற்காக ஜனவரி மாதத்தின் இறுதிவாரத்தில் வேட்புமனுவை கோரி அதன் பின்னர் தேர்தலை நடாத்துமாறு தேசிய காங்கிரஸ் தேர்தல்கள் ஆணையகத்தை கோரியுள்ளது எனவும் சட்டத்தரணி பஹீஜ் மேலும் தெரிவித்தார்.