மழைக்காலம் துவங்கவுள்ளதாலும், ஆற்றில் தண்ணீர் வந்ததாலும் செங்கல் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 5,000 செங்கல் கொண்டு ஒரு லோடு ₹24,000க்கு விற்பனையாகிறது.
நாட்டில் எந்த துறை நலிவடைந்தாலும் கட்டுமான துறை மட்டும் நலிவடைவதில்லை. மக்கள்தொகை வளர்ச்சிக்கு ஏற்ப கட்டிடங்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
இதனால் ஆண்டுதோறும் கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. கம்பி, சிமென்ட், மணல், செங்கல் விலை உயர்ந்துவிட்டது. இதனால் தற்போது வீடு கட்டுவதற்கான செலவு பல மடங்கு அதிகரித்துள்ளது. இதில் செங்கல் விலை தற்போது கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களை பொறுத்தவரை செங்கல் தயாரிப்பதற்கு ஏற்ற மண், ஆற்றங்கரையோரம் அதிகளவில் கிடைக்கிறது. தற்போது ஆறுகளில் தண்ணீர் வந்துவிட்டதால் பல இடங்களில் செங்கல் தயாரிப்பு பணி தடைப்பட்டுள்ளது.
இதனால் கடந்த ஜூலை மாதம் துவக்கத்தில் ₹3.80க்கு விற்பனையான ஒரு செங்கல் தற்போது 4.80 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து ஒரு லோடு (5,000 கற்கள்) ₹24,000க்கு விற்பனையாகிறது.
கடந்த மார்ச் மாதம் முதல் ஒரே சீரான விலையில் நீடித்த செங்கல் விலை, மழைக்காலம் துவங்கிவிட்டதாலும், ஆறுகளில் தண்ணீர் வந்ததாலும் விலை உயர்ந்துள்ளதாக செங்கல் சூளை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பருவமழை தீவிரமாகும் காலத்தில் செங்கல் விலை இன்னும் பல மடங்கு உயரும் வாய்ப்புள்ளது. இதனால் கட்டுமான பொறியாளர்கள் தற்போதே தேவையான செங்கலை வாங்கி இருப்பு வைத்து கொள்கின்றனர். இதன் காரணமாகவும் செங்கல் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதாக செங்கல் தயாரிப்பு உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

