நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவிவரும் அசாதாரண காலநிலை மாற்றத்தினால் மலையகப் பகுதிகளில் விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இதன்படி, நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இவ்வாறு மண்சரிவு ஏற்படுவதற்கான ஆபத்து இருப்பதாகவும் நிலையம் கூறியுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ, கொத்மலை, நுவரெலியா பிரதேச செயலகப் பிரிவும் அவற்றை அண்மித்த பகுதிகளும், இரத்தினபுரி மாவட்டத்தில் குருவிட்ட, எஹலியகொட, எலபாத்த மற்றும் கிரியல்ல பிரதேச செயலகப் பிரிவு மற்றும் கேகாலை மாவட்டத்தில் புளத்கோபிட்டிய, தெரனியகல மற்றும் யட்டியாந்தொட்ட பிரதேச செயலகப் பிரிவு ஆகிய இடங்களில் மண்சரிவு ஏற்படலாமென தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்தப் பகுதிகளில் ஏற்படக்கூடிய மண்சரிவு தொடர்பில் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தவிரவும் இரத்தினபுரி பிரதேச செயலகப் பிரிவு மற்றும் தெஹியோவிட்ட பிரதேசங்களில் மண்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதால் செம்மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
சேற்றுநீர் தேங்குவது, நிலங்களில் ஏற்படும் திடீர் வெடிப்புக்கள், மின்விளக்கு கம்பங்கள் மற்றும் மரங்கள் தாழிறங்குவது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அந்தப் பகுதியிலிருந்து வெளியேறி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறும் அவர் மேலும் பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

