மலாலாவை துப்பாக்கியால் சுட்ட தலிபான் தீவிரவாதி பசல் உல்லா, ஆளில்லா விமான தாக்குதலில் கொல்லப்பட்டதாக அமெரிக்கா 4வது முறையாக தகவல் வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் செயல்படும் ‘தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான்’ என்ற தீவிரவாத அமைப்பின் தலைவன் பசல் உல்லா. பல ஆண்டாக தேடப்படும் தீவிரவாதியான இவன், கடந்த 13ம் தேதி ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள குனார் மானாக பகுதியில் அமெரிக்கா படை நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்க அரசின் உதவியுடன் நடத்தப்படும் ‘வாய்ஸ் ஆப் அமெரிக்கா’ வானொலி இத்தகவலை வெளியிட்டுள்ளது.
ஆனால், இத்தாக்குதலில் தலிபானின் மூத்த தலைவர் ஒருவர் கொல்லப்பட்டதாக மட்டுமே அமெரிக்க ராணுவம் உறுதி செய்துள்ளது. கடந்த 2012ல், ஆப்கானிஸ்தானில் கல்வி உரிமைக்காக போராடிய 15 வயது சிறுமி மலாலாவை தலிபான் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் படுகாயமடைந்த அவர் தீவிர சிகிச்சைக்குப் பின் குணமாகி பின்னர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார். மலாலாவை துப்பாக்கியால் சுட்டது பசல் உல்லா என சந்தேகிக்கப்படுகிறது. மேலும், கடந்த 2013ல் பாகிஸ்தானின் பெஷாவர் ராணுவ பள்ளியில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 130 மாணவர்கள் உட்பட 150 பேர் பலியாயினர். இந்த தாக்குதலுக்கும் மூளையாக செயல்பட்டவன் பசல் உல்லா. இவன் கொல்லப்பட்டு விட்டதாக கடந்த 2010ம் ஆண்டு முதல் இதுவரை அமெரிக்கா 4வது முறையாக தகவல் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

