மூட நம்பிக்கையால் விமானத்தின் எஞ்சினை நோக்கி நாணயங்களை வீசிய மருத்துவம் படித்த பெண் சீனாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சீனாவில் கோவில் மணி, பூங்காவில் உள்ள சிலை உள்ளிட்ட பொருட்களின் முன் நாணயங்களை வீசினால், அது தீயதையும், நோயையும் விரட்டி நன்மை தரும் என பரவலாக நம்பப்படுகிறது. இந்நிலையில் வாங் என்ற 23 வயது மருத்துவம் படித்த மாணவி தனது சொந்த ஊரான நன்சங்-கில் (Nanchang) இருந்து ஸின்ஜிங்கிற்கு (Xinjing) ஸிச்சுவான் (Xichuan) விமான நிறுவனம் மூலம் வந்தார்.
விமான நிலையத்தில் இருந்து வெளியேறுவதற்கு முன் விமானத்தின் எஞ்சினை நோக்கி மூன்று நாணயங்களை வீசி எறிந்தார். இதையடுத்து விமான நிலையத்தில் இருந்த காவலர்கள் அவரை கையும் களவுமாக பிடித்தனர். விசாரணையில் தனது சகோதரியின் மகன் நலம் பெறுவதற்காக வீசியதாகவும், அது சட்டவிரோதம் என தெரியாது எனவும் பதிலளித்த அவருக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
ஒருவேளை நாணயங்கள் கண்டுபிடிக்கப்படாமல் போயிருந்தால், அது கற்பனைக்கும் எட்டாத பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருக்கும் எனவும் விமான நிலைய அதிகாரிகள் எச்சரித்தனர்.
விமானப் பயணத்தில் உலகளவில் அமெரிக்காவை சீனா 2022-ம் ஆண்டில் முந்திவிடும் எனக் கூறப்பட்டாலும் அந்நாட்டில் உள்ள மக்கள் தொகையில் 70 சதவீதத்துக்கும் அதிகமானோர் இதுவரை விமானப் பயணம் மேற்கொண்டதில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவர்களுக்கு விமானப் பாதுகாப்பு குறித்த போதிய அறிவு இல்லை எனவும் விளக்கம் அளித்தனர்.

