கொவிட் என்பது சாதாரண நோய் அல்ல. அதிக அவதானத்துடன் செயற்பட வேண்டும். கொவிட் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கை ஆகியவற்றை கருத்திற் கொண்டே ஊரடங்கு சட்டத்தை தொடர்ந்து அமுல்படுத்துவதா ? அல்லது தளர்த்துவதா? என்ற தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சரவை இணைப்பேச்சாளர், பெருந்தோட்டத்துதுறை அமைச்சர் ரமேஷ் பதிரண தெரிவித்தார்.
பலப்பிடிய வைத்தியசாலையில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை ‘ பெருந்தொற்று ‘ என உலக சுகாதார ஸ்தாபனம் பிரகடனப்படுத்தியுள்ளது. மருத்துவ துறையில் முன்னேற்றமடைந்துள்ள நாடுகளினால் கூட வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாதநிலை காணப்படுகிறது.
ஆகவே கொவிட் தொற்றை சாதாரண நோய் என ஒருபோதும் கருத முடியாது. அனைத்து தரப்பினரும் அவதானத்துடன் செயற்படவேண்டும். கொவிட் தாக்கத்தை கருத்திற்கொண்டு நாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார தரப்பினரது ஆலோசனைகளுக்கு அமையவே ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
கொவிட் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கை ஆகியவற்றை கருத்திற்கொண்டு அமுலில் உள்ள ஊரடங்கு சட்டத்தை தொடர்ந்து நீடிப்பதா? அல்லது தளர்த்துவதா? என்ற தீர்மானம் எடுக்கப்படும் என்றார்.