ஜனாதிபதி செயலகத்திற்கு முன் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் எதிர்வரும் 19 ஆம் திகதி இரண்டு மணிக்கு ஜனாதிபதி செயலகத்திற்கு முன் இடம்பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டுள்ளார்.
மின் கோபுரம்
மன்னாரில் (Mannar) காற்றாலை மின் கோபுரம் அமைத்தல் மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டம் இன்று (09) 38 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது.

மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட இளையோர்கள் மற்றும் மக்கள் தொடர்ச்சியாக குறித்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
கிராம மக்கள்
குறித்த போராட்டத்திற்கு நாளாந்தம் ஒவ்வொரு கிராம மக்கள் மற்றும் வர்த்தகர்கள் உள்ளடங்களாக அனைத்து தரப்பினரும் தொடர்ந்து ஆதரவை வழங்கி வருகின்றனர்.

இந்தநிலையில், குறித்த போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட சிகை அலங்கரிப்பாளர்கள் சங்கம் முழுமையாக கடைகளை மூடி ஆதரவு வழங்கி குறித்த போராட்டத்தில் பங்கேற்றனர்.
அத்தோடு, காலி முகத்திடல் போராட்டத்தை முன்னின்று நடத்திய அருட்தந்தை ஜீவந்த பீரிஸ், காலி முகத்திடல் அரகள குழுவினர் மற்றும் பௌத்த மதகுரு ஆகியோர் கொழும்பில் இருந்து வருகை தந்து தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
காற்றாலை
இது தொடர்பில் அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் மேலும் தெரிவிக்கையில், “மன்னாரில் காற்றாலை க்கு எதிரான போராட்டம் 38 ஆவது நாளாக தொடர்கின்றது.

மக்களின் போராட்டத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் அத்தோடு, ஜனாதிபதி காற்றாலைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்களின் போராட்டத்திற்கு நீதி கிடைக்காது விட்டால் எதிர்வரும் 19 ஆம் திகதி மாலை இரண்டு மணிக்கு ஜனாதிபதி செயலகம் முன் போராட்டத்தை நடத்துவோம்” என அவர் தெரிவித்துள்ளார்.