மனைவியை கொலை செய்ததாக தண்டனை விதிக்கப்பட்டு லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்தியர் பஞ்சாப் சிறைக்குமாற்றப்பட உள்ளார்.பஞ்சாப்பை சேர்ந்தவர் ஹர்பிரீத் ஆலாக். இவரது மனைவி கீதா ஆலாக். லண்டனில் வசித்தனர். இரண்டு குழந்தைகள் உள்ளனர். கீதா லண்டனில் உள்ள சமூக வானொலி நிலையத்தில் பணியாற்றி வந்தார். ஹர்பிரீத் லண்டனில் உள்ள ரவுடிகளுடன் தொடர்பு வைத்து பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டார். இதனால் கீதா விவாகரத்து வழக்கு தொடர்ந்தார்.இந்நிலையில் 2009ம் ஆண்டு பள்ளியில் இருந்து தனது குழந்தைகளை அழைத்து வர சென்ற கீதா கொடூரமான நிலையில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் போலீசார் விசாரணை நடத்தி ஹர்பிரீத், அவரது நண்பர்கள் ஷெர் சிங், ஜஸ்வந்த் தில்லன் ஆகியோரை கைது செய்தனர்.இந்த வழக்கில் மூன்று பேருக்கும் 28 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அங்கு சிறை தண்டனை அனுபவித்து வரும் ஹர்பிரீத் இந்திய–இங்கிலாந்து கைதிகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் இந்தியா கொண்டு வரப்படுகிறார். மீதியுள்ள 19 ஆண்டுகளை பஞ்சாப் மாநில சிறைச்சாலையில் அனுபவிப்பார் என லண்டன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

