Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மனித மூலதன அபிவிருத்திக்கான பிராந்திய மையமாக இலங்கை மாற்றப்படும்! – ஜனாதிபதி

July 19, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
‘நீங்கள் எனக்கு வரலாறு கற்பிக்க முயற்சிக்கிறீர்களா? தொல்பொருள் திணைக்கள அதிகாரியிடம் கடுந்தொனியில் கேள்வியெழுப்பினார் ஜனாதிபதி

மனித வள அபிவிருத்திக்கான பிராந்திய மையமாக இலங்கையை மாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பல்வேறு தர நிலைகளில் இயங்கும் தொழில்நுட்பக் கல்லூரிகளை உயர் தொழில்நுட்பம் மற்றும் முகாமைத்துவக் கல்லூரிகளாக மாற்றி, தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்வி பாடங்கள் தொடர்பான பட்டப்படிப்புகளை அறிமுகப்படுத்தும் நிலைக்கு கொண்டு வர வேண்டும் எனவும்  தேசிய தொழிற்கல்வி தகுதியை (NVQ) மறுபரிசீலனை செய்து சர்வதேச அங்கீகாரத்துடன் கூடிய  அவுஸ்திரேலிய தகுதி நிலைக்கு கொண்டு வர வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான மூலோபாய நடவடிக்கையாக இந்தியாவுடன் ஒருங்கிணைந்த மின்சார இணைப்பு முறைமையையும் நில இணைப்பையும் ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி மேலும் வலியுறுத்தினார்.

அலரி மாளிகையில் நேற்று (18) நடைபெற்ற ‘2024 இலங்கை மனித மூலதன உச்சி மாநாட்டில்” (Sri Lanka Human Capital Summit) உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

2016ஆம் ஆண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்தபோது இலங்கை எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வு காண அனைத்து பங்குதாரர்களுக்கும் ஒரே தளத்தை அமைக்கும் நோக்குடன் ‘இலங்கை மனித மூலதன உச்சி மாநாடு” ஆரம்பிக்கப்பட்டது.

“எதிர்காலத்துக்கு ஏற்ற தொழிலாளர் படையைக் கட்டியெழுப்புவதன் மூலம் இலங்கையின் பொருளாதார வாய்ப்புகளுக்கான கதவுகளை திறத்தல்” என்ற தொனிப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்த ஆண்டு மாநாட்டில் மனித மூலதனத்தை வளர்ப்பது, பயன்படுத்துவது மற்றும் விரிவுபடுத்துவது ஆகியன தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

இந்த முயற்சியானது வெறும் பொருளாதார வளர்ச்சிக்கு அப்பால் சென்று இலங்கையை குறைந்த நடுத்தர வருமான பொருளாதாரத்தில் இருந்து வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. திறமையை வளர்த்தல், புதுமைகளை மேம்படுத்துதல் மற்றும் ஒவ்வொரு குடிமகனுக்கும் அதிகாரம் அளிப்பதில் எதிர்பார்ப்பு மாற்றம் தங்கியுள்ளது.

இலங்கையின் பொருளாதாரத்தில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் அரச துறை திறன் மேம்பாடு, தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா, நிதிச் சேவைகள் மற்றும் முன்முயற்சிகள் ஆகிய துறைகளில் மூலோபாய ஆற்றலுக்கு இந்த மாநாடு முன்னுரிமை அளிக்கும்.

முதலீட்டுச் சபையின் தலைவரும் மனித மூலதன உச்சி மாநாட்டின் தலைவருமான தினேஷ் வீரக்கொடி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஸ்கொட் மொரிசன் ஆகியோருக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி வைத்தார்.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

“2022ஆம் ஆண்டில், சுமார் 4 இலட்சம் இலங்கையர்கள், நாட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. 2023இல் நாட்டை விட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கையும் இதே அளவானதாகும். இந்த எண்ணிக்கை தொடர்ந்து குறையும் அல்லது அதே அளவில் இருக்கும்.

ஆனால் நாம் தேவையான அடிப்படை பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டால், 2026-2027ஆம் ஆண்டுக்குள் இந்த நிலையை, நிறுத்த முடியும். நம் நாட்டின்  வங்குரோத்து நிலை அவர்களின் வாழ்க்கையை மிகவும் கடினமாக்கியது. அவர்களின் பிள்ளைகளின் கல்வியில் கவனம் செலுத்த வேண்டியிருந்தது. அவர்கள் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த பணம் போதுமானதாக இருக்கவில்லை. அதனால் நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்தனர்.

ஒரு டொலரின் பெறுமதி 185 ரூபாயாக இருந்தபோது தான் சம்பளம் தயாரிக்கப்பட்டது. ஆனால் டொலரின் பெறுமதி 300 ரூபாயாக இருக்கும்போது விலை நிர்ணயம் செய்கிறோம். எனவே, ஒரு நடுத்தர வர்க்க நிர்வாகியின் இருப்பு எப்படி இருக்கும் என்பதை நீங்கள் கற்பனை செய்யலாம்.

நாங்கள் இதுவரை செய்ததெல்லாம், இறையாண்மை கொண்ட அரசுகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகிய இரு தரப்பிலுமுள்ள கடன் வழங்குநர்களினால் எமக்கு  நிவாரணங்கள் வழங்கிய பிறகு எம்மால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியும் என்பதை உறுதிப்படுத்துவது மாத்திரம்தான். ஆனால் கடனை எப்படி திருப்பிச் செலுத்துவது, அதற்கான பணத்தை எங்கிருந்து பெறுவது? அந்நியச் செலாவணியை எவ்வாறு பெறுவது? என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

நான் பொருளாதார பரிமாற்றச் சட்டத்தைக் கொண்டு வந்தபோது, பாராளுமன்றத்தில் ஒரு தரப்பினர் நீதிமன்றத்திற்குச் சென்று, இறக்குமதி சார் பொருளாதாரமொன்று அவசியம் என்பதால் அதை நிராகரிக்க வேண்டும் என்று கோரினார்கள். 

இறக்குமதி சார் பொருளாதாரம் என்று ஒன்று இருக்கிறது என்ற எண்ணத்தை முதலில் அகற்ற வேண்டும். நாம் முதலில் மிகவும் போட்டி நிறைந்த நவீன ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு நம்மை தயார்படுத்த வேண்டும்.

இப்போது அதற்கான வாய்ப்பு வந்துள்ளது. பொருளாதாரத்தில் ஒரு அடிப்படை மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதை நம் நாட்டில் பலர் உணர்ந்துள்ளனர். எனவே, அவர்களுக்குத் தேவையான துறைகள் தொடர்பான அறிவை அவர்களுக்கு வழங்க முடியும்.

நவீன முறையில் விவசாயம் செய்ய மூன்று முதல் நான்கு இலட்சம் ஏக்கர் நிலம் உள்ளது. விவசாயத்தை நவீனப்படுத்தக்கூடிய கிராமப்புற மக்களுக்குச் சொந்தமான நிலமும் எங்களிடம் உள்ளது.

சுற்றுலாத் துறையைப் போலவே, தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழில்களுக்கும் தன்னியக்கத்தைப் பயன்படுத்த மக்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். அதற்கான வாய்ப்பு உள்ளது.  இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பு பற்றி இங்கு பேச விரும்புகிறேன்.

இந்தியாவுடன் ஒருங்கிணைந்த மின் இணைப்பு கட்டமைப்பு குறித்து ஒரு முடிவை எட்டியுள்ளோம். ஆனால் அனைத்து அம்சங்களையும் விட நில இணைப்பு முக்கியமானது.

ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுடன் இணைந்து மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களுடன் தமிழகமும் போட்டியிடுகிறது. இந்தப் போட்டியில் இலங்கை, திருகோணமலை மற்றும் கொழும்பு துறைமுகங்களை பயன்படுத்திக்கொள்ள முடியும். இவ்வாறு விரிவுபடுத்தப்பட வேண்டிய பல துறைகளை அடையாளம் கண்டுள்ளோம். 

மேலும் வெளிநாட்டு முதலீடுகளுக்கும் அதை விட உள்ளூர் முதலீடுகளுக்கும் வாய்ப்பானதாக இருக்க வேண்டும்.

பாரிய அளவிலும், சிறிய அளவிலும் தனியார் துறையை விரிவுபடுத்த வேண்டும். அது தவிர வேறு வழியில்லை. இந்த கட்டமைப்புக்குள் நமது மனித மூலதனத்தைக் கட்டியெழுப்புவதை நாம் பார்க்க வேண்டும். நிதி மூலதனம் இல்லாமல் மனித மூலதனத்தை உருவாக்க முடியாது. எனவே இந்த அணுகுமுறையை எடுக்க வேண்டும்.

நாம் முதலில் தொழில் மற்றும் தொழில்நுட்பத் துறையில் கவனம் செலுத்த வேண்டும். தொழில்முறை மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களை செயற்படுத்தும் பல நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்கள் தேவைக்கு அதிகமாகவே எம்மிடம் உள்ளன. அதுபோன்று அமைச்சுகளும் இருக்கின்றன. ஆனால் இந்தத் துறைக்கு, பாடசாலைக் கல்விக்குப் பிறகு, பொறுப்பான ஒரு நிறுவனம் தேவை.

நாடு முழுவதும் சுமார் 700 – 800 பயிற்சி மையங்கள் உள்ளன. சுமார் 300 அரச தொழிற்பயிற்சிக் கல்லூரிகளை ஒருங்கிணைக்க அரசாங்கம் செயற்பட்டு வருகிறது. பின்னர் அவை புதுப்பிக்கப்பட்டு நவீனமயப்படுத்தப்படும்.

அதனைத்தான் நாம் செய்ய வேண்டும். பல்வேறு தரநிலைகளின் கீழ் இயங்கும் தொழில்நுட்பக் கல்லூரிகளை உயர்தொழில்நுட்ப மற்றும் முகாமைத்துவக் கல்லூரிகளாக மாற்றி, தொழில்நுட்பம் மற்றும் தொழில்சார் கற்கைகள் தொடர்பான பட்டங்களை அறிமுகப்படுத்தும் நிலைக்கு கொண்டுவர வேண்டும். பின்னர் நாம் NVQ தகுதியை உயர்த்துவதற்கான பணிகளை ஆரம்பிக்கலாம்.

NVQ தகுதிகளை நாம் மறுபரிசீலனை செய்து, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அதனுடன் தொடர்புடைய பட்டங்களை வழங்கும் அவுஸ்திரேலிய தகுதிகளின் நிலைக்கு தரம் உயர்த்த வேண்டும். அவுஸ்திரேலியாவிலிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய பல விடயங்களில் இதுவும் ஒன்றாகும். ஆசியாவின் முன்னேறிய நாடுகளைப் பார்க்கும்போது, அவை அனைத்தும் தொழில்சார் தொழில்நுட்பக் கல்வி மற்றும் உயர்கல்வியில் தங்கள் மூலதனத்தைக் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்துகின்றன.

ஜப்பான், கொரியா, ஹொங்கொங், சிங்கப்பூர் என்று எடுத்துக்கொண்டால், அந்த நாடுகள் நாடுகள் முன்னிலையில் உள்ளன. எதிர்வரும் ஆண்டுகளில் சீனா, வியட்நாம், மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளும் அந்த நிலையை எட்டும். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கத்தார் அந்த நிலையை எட்டியுள்ளன.

இதுவரை கட்டடங்கள் மற்றும் சில உபகரணங்களை உள்ளடக்கிய உதவித் திட்டங்களைக் கேட்டுப் பழகிவிட்டோம். ஆனால் எதிர்காலத்தில் எமது முறைமையை வலுப்படுத்தவும் நவீனப்படுத்தவும் மட்டுமே வெளிநாட்டு உதவியைப் பெற வேண்டும்.

இவ்விடயத்தில் அவுஸ்திரேலியாவிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பல்வேறு விடயங்கள்  இருக்கின்றன.

மனித மூலதனத்தை கட்டியெழுப்புவதற்கான தளமாக நாம் மாறலாம். மேலும், இந்தியா, பங்களாதேஷ், இலங்கையை உள்ளடக்கிய இந்தப் பிராந்தியத்தை அபிவிருத்தி செய்வதற்கு மனித வளத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும். மேலும் அனைத்து பிம்ஸ்டெக் நாடுகளும் ஒன்றிணைய வேண்டும்.

இலங்கையின் கல்வி முறையை கட்டியெழுப்ப இந்த நாடுகளின் ஆதரவை பெற வேண்டும். கல்வி வாய்ப்புகள் குறித்து 2021/2022இல் அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தால் ஏற்கனவே ஒரு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது.

டீகின் பல்கலைக்கழகம், எடித் கோவன் பல்கலைக்கழகம், சிட்னி தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவை ஏற்கனவே இந்த நாட்டிற்கு வந்துள்ளன. இவ்வாறு, நம் நாட்டில் மேலும் சர்வதேச பல்கலைக் கழகங்கள் உருவாகி வருகின்றன. இத்துடன், அரச துறையில் பல புதிய இலாப நோக்கற்ற பல்கலைக்கழகங்களை அபிவிருத்தி செய்யவும் நாங்கள் பணியாற்றி வருகிறோம். அவற்றில் 04 தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் உள்ளடங்கியுள்ளன.

எனவே முதலில், தற்போதுள்ள முறைமையை மாற்ற வேண்டும். இரண்டாவதாக, கல்வி மற்றும் பயிற்சி முறையை வலுப்படுத்தத் தேவையான மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர்  ஸ்கொட் மொரிசன் கூறுகையில், 

“இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் பின்னர் நாட்டை ஸ்திரத்தன்மைக்கு கொண்டு வருவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாரிய பணியை செய்துள்ளார். இலங்கையின் பொருளாதாரம் மற்றும் அதன் சமூகத்தின் எதிர்காலத்தில் நம்பிக்கையை ஏற்படுத்துவது மிகவும் முக்கியமானது. இது முதலீடு செய்வதற்கும் வாய்ப்புகளைப் பெறுவதற்கும் தூண்டுகிறது.

வருமான சீர்திருத்தம், கடன் மறுசீரமைப்பு, நிறுவன நிதி ஏற்பாடுகளை வலுப்படுத்துதல் மற்றும் மத்திய வங்கியின் சுயாதீனத்தன்மை ஆகியவை தொடர்பில்  எடுக்கப்பட்ட துணிச்சலான, நடவடிக்கைகள் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும் நிதி மீட்சிக்கும் உதவியது என்பதைக் கூற வேண்டும்.

உங்களின் வங்கிக் கட்டமைப்பில் உள்ள விவேகமான கட்டுப்பாடுகள், அரச  நிறுவனங்களுக்கான முக்கியமான சீர்திருத்தங்கள், இலங்கையில் வெளிநாட்டு முதலீடு எவ்வாறு நடைபெறுகிறது உள்ளிட்ட அனைத்திலும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்த உதவும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்னெடுக்கப்படும் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள், சமூக பாதுகாப்பு வலையமைப்பை மறுசீரமைத்தல் உள்ளிட்ட அனைத்தும் இலங்கையின் எதிர்காலத்திற்கு எவ்வளவு முக்கியமானவை. அவ்வாறு இல்லையேல் எதிர்காலத்தில் தொழிலாளர் படை பற்றி கதைப்பதற்கு கூட உங்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்காது. அந்த சவால்களை எதிர்கொள்வதற்கு அர்ப்பணிப்பும் உறுதியும் நிலைத்திருக்க வேண்டும்.

குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுடனான ஒத்துழைப்புடன் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் பொருளாதார வெற்றியைப் பலப்படுத்தக்கூடிய நாற்தரப்பு தலைவர்களின் உரையாடல் மூலம், பிராந்திய பங்காளித்துவங்களில் இலங்கை தீவிரமாக ஈடுபடுவது மிகவும் முக்கியமானதாகும்.

இலங்கையின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்திற்கு அர்ப்பணிப்புடன் உள்ள சர்வதேச நட்பு நாடுகளுடன் மூலோபாய பங்காளித்துவத்தால் சாத்தியமான வேகமான, ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான அடிப்படையாக பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு வலுவான கவனம் செலுத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர் பந்துல குணவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதியும், சர்வதேச காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகருமான மொஹமட் நஷீட் மற்றும் உள்நாடு, வெளிநாட்டு முக்கியஸ்தர்கள் உட்பட ஏராளமானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Previous Post

யாழில் மற்றுமொரு வைத்தியசாலையின் முறைகேடுகள் அம்பலம்

Next Post

மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார் அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர்

Next Post
மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார் அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர்

மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார் அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures