இந்த ஆண்டு வைகை ஆற்றில் தண்ணீர் செல்வதால் வழக்கத்தை விட ஆடிப்பெருக்கு நிகழ்ச்சி களைகட்டியது. பலர் தங்களது குழந்தைகளுக்கு மொட்டையடித்து வழிபட்டனர்.
ஆடி மாதத்தின் 18-ந் தேதி ஆடிப்பெருக்காக கடைபிடிக்கப்படுகிறது. இந்நாளில் நீர்நிலைகளில் பொதுமக்கள் கூடி வழி படுவார்கள்.
குறிப்பாக புதுமண தம்பதிகள் தாலி மாற்றி ஆடிப்பெருக்கை கொண்டாடுவார்கள். இந்நாளில் எந்த நல்ல காரியங்கள் தொடங்கினாலும் சிறப்பானதாகவும், செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.
மதுரை மாவட்டத்தில் நீராதாரமாக உள்ள வைகை ஆற்றில் வருடத்தில் பல மாதங்கள் தண்ணீர் இன்றி காணப்படும். இதனால் ஆடிப்பெருக்கு நிகழ்ச்சி வைகை ஆற்றங்கரையில் நடப்பது அரிதாகவே இருக்கும்.
இந்த ஆண்டு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, வைகை அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக தற்போது ஆற்றில் தண்ணீர் ஓடுகிறது.
ஆடிப்பெருக்கான இன்று மதுரை நகரில் உள்ள ஏ.வி. மேம்பாலம் வைகை ஆற்றங்கரையில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு வழிபட்டனர்.
குறிப்பாக புதுமண தம்பதிகள் தாலி மாற்றி வழிபட்டனர். இந்த ஆண்டு வைகை ஆற்றில் தண்ணீர் செல்வதால் வழக்கத்தை விட ஆடிப்பெருக்கு நிகழ்ச்சி களைகட்டியது. பலர் தங்களது குழந்தைகளுக்கு மொட்டையடித்து வழிபட்டனர்.
இதேபோல் விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள நீர்நிலைகளிலும் ஆடிப்பெருக்கு விமரிசையாக நடைபெற்றது.
வழக்கமாக ஆடிப்பெருக்கு நாளன்று அம்மன் கோவில்களில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். ஆனால் கொரோனா பரவல் காரணமாக நேற்று முதல் தமிழகத்தில் அனைத்து கோவில்களும் மூடப்பட்டன.
மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில் உள்ளிட்ட 23 கோவில்கள் மூடப்பட்டதால் ஆடிப்பெருக்கான இன்று வெறிச்சோடி காணப்பட்டது.
அம்மன் கோவில் நுழைவு வாயில் முன்பு திரளான பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர்.
http://Facebook page / easy 24 news