கொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வரப்பட்ட போதைப்பொருளுடன் இரு இளைஞர்களை புதன்கிழமை (20) கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
நகர்பகுதி திருகோணமலை வீதியில் மாறுவேடத்தில் பொலிஸார் மேற்கொண்ட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 3,700 மில்லிக்கிராம் ஐஸ் போதை பொருள் மற்றும் ஒரு இலட்சத்து 20 ஆயிரத்து 640 ரூபா பணம் , இரு கையடக்க தொலைபேசிகளை ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.
கொழும்பில் இருந்து பஸ்வண்டி ஒன்றில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் போதை பொருளை கடத்தி கொண்டு வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் இரு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இளைஞர் ஒருவரிடமிருந்து 3,200 மில்லிக்கிராம் ஐஸ் போதைப்பொரும், மற்றைய இளைஞரிடமிருந்து 4,500 மில்லிகிராம் ஐஸ் போதை பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் பூம்புகார் லயன்ஸ் கிளப் வீதி மற்றும் கருவப்பங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர்கள் ஆவர்.
மேலும் இந்த இரு இளைஞர்களும் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.