மட்டக்களப்பு – சின்ன ஊறணி (வன்னியில்) பகுதியில் திருடனை கைது செய்யச் சென்ற பொலிஸார் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு பெண்கள் உட்பட 5 பேரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எதிர்வரும் 30 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று வியாழக்கிழமை (26) உத்தரவிட்டார்.
மட்டு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள வீடு ஒன்றில் தொலைக்காட்சி பெட்டி ஒன்றை திருடிச் சென்ற சம்பவம் தொடர்பாக வன்னி என அழைக்கப்படும் சின்ன ஊறணி பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவரை அவரது வீட்டில் வைத்து புதன்கிழமை (25) பிற்பகல் 01.30 மணியளவில் கைது செய்ய முயற்சித்த இரு பொலிஸார் மீது சந்தேக நபர் மற்றும் இரு பெண்கள் உட்பட 6 பேர் கொண்ட குழுவினர் கத்தியால் குத்தியும் பொல்லால் அடித்தும் தாக்குதலை மேற்கொண்டனர்.
இதன்போது இரு பொலிஸாரும் படுகாயடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் தாக்குதலை மேற்கொண்டு தப்பியோடி தலை மறைவாகிய பிரதான சந்தேக நபரான திருடன் உட்பட 3 ஆண்களும் இரு பெண்களும் கைதுசெய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர்களை எதிர்வரும் 30 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.