2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிவாரணத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல,எதிர்கால அபிவிருத்தியை இலக்காக கொண்டது.
பாரம்பரியமான தவறுகள் இந்த வரவு செலவுத் திட்டத்தில் திருத்திக் கொள்ளப்பட்டுள்ளன. மக்கள் போராட்டம் அரசியல் ரீதியில் மாற்றத்தை ஏற்படுத்தியதை அனைவரும் ஒரு படிப்பினையாக கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (18) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான நான்காவது நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒருசில விடயங்கள் மாறுப்பட்ட தன்மையில் காணப்படுகிறது.75 வருட கால அரசியல் பற்றி பேசப்படுகிறது.
இந்த 75 வருட காலத்தில் நாட்டில் 30 வருடம் யுத்தம் நிலவியதை மறக்க முடியாது,சுதந்திரம் பெற்றதன் பின்னரான காலப்பகுதியில் நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்ற கலவரங்கள் பொருளாதார பாதிப்பை தீவிரப்படுத்தியது.
75 வருட காலத்தில் 40 வருடங்கள் நாட்டின் எதிர்காலத்தை சீரழிக்கும் சம்பவங்கள் மாத்திரம் இடம்பெற்றன.இவ்வாறான பின்னணிகளை கடந்து வந்துள்ளோம்.
இந்த வரவு செலவுத் திட்டம் நிவாரணத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல, எதிர்காலத்தை மாத்திரம் இலக்காக கொண்டது.
வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் உலகில் சிறந்த வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்துள்ளோம் என ஆளும் தரப்பு குறிப்பிடும், உலகில் மிக மோசமான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என எதிர்தரப்பினரும் குறிப்பிடுவார்கள்.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் உள்ள சிறந்த விடயங்களை எதிர்தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளமை சிறந்த எடுத்துக்காட்டாகும்.வரவு செலவுத் திட்டத்தில் மேலதிக செலவுகளுக்காக எவ்வித நிதியும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
சுற்றுலாத்துறையை மேம்படுத்த அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
நட்டடையும் அரச நிறுவனங்கள் நிச்சயம் மறுசீரமைக்கப்பட வேண்டும், கொள்கை ரீதியில் மாற்றத்தை ஏற்படுத்தாமல்
தற்போதைய நிதி நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது. பொருளாதார பாதிப்பிற்கு தீர்வு காண சகல அரசியல் தரப்பினரும் கூட்டு பேச்சுவார்த்தையுடன் ஒன்றிணைய வேண்டும்.
நாட்டு மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற முடியாத நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது. நெருக்கடிகளை ஏற்படுத்தியவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது. மக்கள் போராட்டம் அரசியல் ரீதியில் மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதை ஏற்றுக்கொள்கிறோம் என்றார்.