எமது மக்களை கொன்று குவித்த இராணுவத்தினர் விசாரிக்கப்பட வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கை என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
கடந்த 1984 ஆம் அண்டு கொல்லப்பட்ட தென்மராட்சி மேற்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்க பணியாளர்களையும், கைதடி மக்களையும் நினைவு கூரும் நிகழ்வு நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு மேலும் தெரிவித்ததாவது,
“போர்க் காலத்தில் கூட்டுறவுச் சங்கத்தின் ஊழியர்களின் செயற்பாடுகள் அளப்பரியது. அந்தக் காலத்தில் பல்வேறு அச்சுறுத்தல்கள் இடையுறுகளுக்கு மத்தியிலும் மக்களுக்கான தமது சேவைகளை சிறந்த முறையில் அவர்கள் மேற்கொண்டு வந்திருந்தனர்.
அவ்வாறு மன உறுதியுடன் தைரியமாக அவர்கள் செயற்பட்டு வந்ததனாலேயே இராணுவத்தினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர்.
இங்கு கூட்டுறவுச் சங்கத்தின் ஊழியர்கள் கொல்லப்பட்டதானது அவர்கள் ஆயுதம் எடுத்தவர்கள் என்பதற்காகவோ விடுதலைப் புலிகள் என்பதற்காகவோ அல்ல. அவர்களை இராணுவம் வெறுமனே எழுந்தமானமாக துப்பாக்கிகளால் சுட்டுக் கொன்றிருக்கின்றது.
எமது மக்களைச் இராணுவத்தினர் சுட்டுக் கொன்றிருக்கின்றார்கள் என்பதற்கு இந்தச் சம்பவமும் ஒரு உதாரணமாகவே இருக்கின்றது. அவ்வாறு இங்கு சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பல சம்பவங்கள் இருக்கின்றன.
எமது மக்கள் போர் முனையிலும் அதற்கு முன்னரும், பின்னரும் கொன்று குவிக்கப்பட்டிருக்கின்றனர். இன்றைக்கும் இராணுவத்தினரின் அத்தகைய தொடர்ச்சி எங்களது மண்ணிலே இருக்கின்றன.
ஆகவே இந்த கொலைகளுக்கு காரணமான இராணுவத்தினர் விசாரிக்கப்பட வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை” என தெரிவித்தார்.

