Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மக்களுக்காக பல தடவைகள் சிறை சென்று வந்தவரே மாவை!

January 4, 2018
in News, Politics
0
மக்களுக்காக பல தடவைகள் சிறை சென்று வந்தவரே மாவை!

மாவை பல தடவைகள் மக்களுக்காகச் சிறை சென்றார். அவர் மீது ஒரு மதிப்பு இன்றும் எனக்குள்ளது என வடமாகாண மதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக்கட்சியின் செயலாளர் கி.துரைராசசிங்கத்தின் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில் இரண்டாவது பகுதி கீழே கொடுக்கப்பட்டள்ளது.

9. போர்க்குற்றங்கள், இன அழிப்பு பற்றி நாங்கள் காரில் சுமந்திரனுடன் பேசி வந்ததைக் குறிப்பிட்டுள்ளார். நண்பர் ஒரு விடயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இன அழிப்பு என்பது உண்மை. அதை நீதிமன்றில் நிரூபிக்க முடியுமா என்பது இன்னொன்று. நிரூபிக்க முடியாது போகும் என்று சுமந்திரன் அவர்கள் கூறிக் காரணங்களை எடுத்தியம்பினார்.

அதில் இருந்த சட்டச் சிக்கல்களை உணர்ந்து கொண்டேன். ஆனால் வடமாகாணசபை இயற்றிய பிரேரணை மக்களின் கருத்தைப் பிரதிபலித்த ஒன்று. அது சமூகம் சார்ந்தது. உண்மை சார்ந்தது. அதனைச் சர்வதேச அரங்கில் நிரூபிக்க முடியுமா, அதில் உள்ள சட்டச் சிக்கல்கள் எவை என்பன வேறு விடயங்கள். ஆகவே சட்ட ரீதியாக நான் சுமந்திரனுடன் பேசியதை சமூக ரீதியாகக் கொண்டு வந்த பிரேரணையுடன் கலந்து நண்பர் குளப்பி அடிக்கக்கூடாது. ஒருவர் இன்னொருவரைக் கொன்றுள்ளார் என்று வைத்துக் கொள்வோம். சாட்சியங்கள் இல்லாததால் கொன்றவர் விடுதலை பெற்றுவிடுகின்றர். விடுதலை பெற்றதால் உண்மையைப் பொறுத்த வரையில் அவர் கொலை செய்யவில்லை என்று ஆகிவிடுமா?

ஆயிரம் முரண்பாடுகளையும் தன்னுள் அடக்கி தலை நிமிர்ந்து நிற்கக் கூடியது சத்யம் அல்லது உண்மை என்று சங்கராச்சாரியாரின் குருவின் குரு கௌடபாதர் அவர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கூறிவிட்டார். இனவழிப்பு உண்மை. ஆனால் நிரூபிப்பது கடினம் என்பதால் உண்மை பொய்மையாகாது. நிரூபிப்பது சிரமம் என்பதால் உண்மையை வெளியிடாது இருக்க வேண்டிய அவசியம் எமக்கு இருக்கவில்லை.

சிவாஜிலிங்கம் வடமாகாண சபையில் இன அழிப்புப் பிரேரணையைக் கொண்டு வந்த போது அது முழுமையுடையதாக எனக்குப்படவில்லை. அதற்காக அதைக் கூடிய வலுவுடன் தயாரித்து சபையில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறினேன். இதனை நாங்கள் அனைவரும் சேர்ந்தே செய்யலாம் என்று கூறி அவரின் பிரேரணையைத் தவணை போட்டேன். அதன் பின் சுமந்திரனின் துணையையே நான் நாடினேன். அவர் அதனை முழுமையாகத் தயாரித்துத் தருவதாகக் கூறி காலம் கடத்தி வந்தார்.

2014ம் ஆண்டு இறுதி வரை அவர் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. கடைசியில் சிவாஜிலிங்கம் எப்படியாவது தனது பிரேரணை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று 2014ம் ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் கூட்டத்தின் போது வாதாடினார். அப்பொழுது தான் நான் அதனை நானே உருவாக்கித் தருகின்றேன், கடைசியாக ஒரு தவணை போடும் படி கேட்டு பெற்றுக் கொண்டேன்.

புதிய அரசாங்கம் வந்ததற்கும் பிரேரணைக்கும் எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. புதிய அரசாங்கம் வந்ததால் இப் பிரேரணை கொண்டுவரவில்லை. இது ஒரு தொடர் நிகழ்ச்சி. வடமாகாணசபையில் நடந்த ஒரு தொடர் நிகழ்ச்சி. கட்சித் தலைமைக்குத் தெரிந்த ஒரு தொடர் நிகழ்ச்சி.கட்சித் தலைமைகள் அனுசரணை வழங்கவுமில்லை.எதிர்க்கவுமில்லை.

10. கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனக் கொள்கையை ஏற்ற நான் திடுதிடுப்பென்று மாறிவிட்டேன் என்று கூறினார் நண்பர். அப்படியல்ல. மாறியது நான் அல்ல. கட்சித் தலைமைதான் மாறியது. அதை அவர்களுக்கு மக்கள் சார்பாக எடுத்துக் கூறவே தமிழ் மக்கள் பேரவை பிறந்தது.

11. அடுத்துக் கூறுவது தான் விந்தையிலும் விந்தையான கூற்று. தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவி தம்பி மாவைக்கு சென்றடைந்ததே எனது மனமாற்றத்திற்குக் காரணம் என்கின்றார். கட்சி அரசியலின் வெறுப்பு மிக்க செயற்பாடுகளைக் கண்டு வந்தவன் நான். அரசியலுக்குப் புதியவன். ஏற்கனவே நல்ல பதவிகளை வகித்திருந்தவன். கேவலம் ஒரு கட்சியின் தலைமைத்துவத்திற்காகக் கனாக் காண நான் என் சில மாணவர்கள் போன்றவனா?

அரசாங்கத்தால் ஒரு முதலமைச்சருக்கு வழங்கப்படும் கௌரவம் மத்தியின் முன்னணி அமைச்சர்களுக்கு வழங்கப்படும் கௌரவத்திற்கு இணையானது. கட்சித் தலைவர்களுக்கு அவ்வாறான கௌரவத்தை அரசாங்கம் அளிக்கவில்லை. ஆகவே மாண்புமிகு முதலமைச்சர் பதவியில் இருந்து கொண்டு கட்சித் தலைவர் பதவியைப் பெற ஆசைப்பட்டதாகக் கூறுவது நண்பரினதும் நண்பருக்கு இந்தக் கடிதத்தை வெளியிடுமாறு பணித்தவருக்கும் இருக்கும் பதவி மோகத்தையே எடுத்துக் காட்டுகின்றது. தாம் தமக்குக் கிடைக்க வேண்டும் என்று கனாக்காணும் பதவி மேல் எனக்கு மோகம் இருந்தது என்று கூறுவது அவர்களின் வங்குரோத்து அரசியலையே வெளிக்காட்டுகின்றது. அவர்களுக்காக நான் அனுதாபப்படுகின்றேன்.

12. ½ வருடங்களே பதவியில் இருப்பதாக நான் கூறியதாகக் கூறுகின்றார் நண்பர். அப்படியல்ல. நான் அரசியலுக்குள் வரமுடியாது என்று முரண்டுபிடிக்க எம்முள் யாரோ ஒருவர் 2 ½வருடங்கள் நீங்கள் முதலமைச்சராக இருந்துவிட்டுப் போங்கள். அதன் பின் வேறொருவரை நியமிக்கலாம் என்று கூறினார். அதற்கு நான் அரசியலே வேண்டாம் என்கின்றேன். நீங்கள் காலவரையறை அரசியலை என்மீது திணிக்கப் பார்க்கின்றீர்கள் என்றேன். 2 ½ வருடங்கள் தான் நான் முதலமைச்சராக இருப்பேன் என்று நானோ, இருக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ எஞ்ஞான்றுங் கூறவில்லை.

தமிழரசுக் கட்சியின் தலைவராக மாவை வந்ததில் மகிழ்ச்சி அடைந்தவன் நான். அவர் எத்தனை முறை மக்களுக்காகச் சிறை சென்று வந்த ஒருவர் என்பதை நான் அறிந்திருந்தேன். அவரையும் காசி ஆனந்தனையும் மட்டக்களப்பில் குற்றப் பத்திரிகை பதியாது தொடர்ந்து பல மாதங்கள் அரசாங்கம் சிறையில் அடைத்திருந்ததைக் கண்ட நான் நீதித்துறைக்கு வந்த சில மாதங்களிலேயே 1979ம் ஆண்டில் மட்டக்களப்பு ஒன்றிணைந்த மாவட்ட நீதிபதியாக அவர்களைப் பிணையில் செல்ல அனுமதித்தேன்.

அப்போது தான் மாவை பல தடவைகள் மக்களுக்காகச் சிறை சென்றதை அறிந்து கொண்டேன். அதற்காக அவர் மீது ஒரு மதிப்பு இன்றும் எனக்குள்ளது. அப்பேர்ப்பட்ட பழுத்த அனுபவம் மிக்க ஒரு அரசியல்வாதி தமிழரசுக் கட்சியின் தலைவராக வருவதை நான் எப்படி வயிற்றெரிச்சலுடன் பார்க்க முடியும்? அவரின் தேர்வில் முழு மகிழ்ச்சியடைந்தவர்களில் நானும் ஒருவன்.

நண்பர் துரைராஜசிங்கம் போன்றவர்கள் இவ்வாறான பதவிகளுக்காகக் கனாக்கண்டு வருவதை என்மேல் திணிக்கப் பார்க்கின்றார்கள். பதவிகளுக்காகக் கனாக்காணவோ அலையவோ எனக்குத் தேவையில்லை. முழுமையான வாழ்க்கையை ஏற்கனவே நான் வாழ்ந்துவிட்டேன். எல்லாம் கிடைத்துவிட்டன. அமைதியான ஓய்வு நிலையொன்றே எனக்குத் தேவையாக இருந்தது. யாவரும் வலிந்து கேட்டதால் தான் இப்பதவிக்கு வந்தேன்.

இப்பதவியின் பலவிதமான கடமைகளை, சுமைகளைப் போகப் போகத்தான் அறிந்தேன். அவ்வாறு இருக்கும் போது ஒரு கட்சியைத் தலைமை ஏற்று நடத்த வேண்டும் என்ற எண்ணம் என்னைப் போன்ற அகவை எண்பதை எட்டும் ஒருவருக்கு வரமுடியுமா? நண்பரின் குற்றச்சாட்டு நகைப்புக்கு உரியது. அவருக்கும் அவரை ஆட்டிப் படைக்கும் சிலருக்கும் இருக்கும் நித்திய கனாக்களை என் மீது திணிக்கப் பார்க்கின்றார்கள்.

13. ஊர்த் தேரைச் சேர்த்து இழுக்க வேண்டியது பற்றி நண்பர் கூறியுள்ளார். நாம் யாவரும் ஒன்றிணைந்து இழுக்க வரும் போது ஒரு சிலர் மட்டும் அமெரிக்கா நோக்கியும் கொழும்பு நோக்கியும் தேரை இழுக்க முயற்சிப்பது கவலை அளிக்கின்றது. அப்படி இருந்தும் நான் தேர் இழுப்பவர்களுடன் கூடி வடத்தில் கைவைத்துக் கொண்டே எனது கருத்தை வெளியிட்டுக் கொண்டு வருகின்றேன். வடத்தைக் கைவிட்டுச் செல்லவில்லை. தேரை நாம் நிர்ணயித்த இடம் நோக்கி நகருங்கள். கொழும்பு நோக்கியும் அமெரிக்கா நோக்கியும் நகர்த்தாதீர்கள் என்று தான் சொல்லி வருகின்றேன்.

14. கருத்து வெளியிடுமாறு பத்திரிகைகளினால் கோரப்பட்ட போது நான் இடைக்கால அறிக்கையை முழுமையாக வாசித்திருக்கவில்லை என்று கூறியது உண்மை. அதன் பின் வாசித்தேனோ இல்லையோ ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். ஒற்றையாட்சிக்கான ஆங்கிலச் சொல்லை (Unitary) நீக்கி அதற்குப் பதிலாக சிங்களத்தில் ஒற்றையாட்சிக்கு ஒப்பான ‘ஏகிய’ என்ற பதத்தையும் தமிழில் கூட்டாச்சிக்கு ஒப்பான ‘ஒருமித்த’ என்ற பதத்தையும் அறிக்கையில் பாவித்ததில் இருந்து மக்கள் மீது திணிக்கப்பட இருக்கும் மோசடி புலப்படுகிறது.

ஏகிய ராஜ்ய என்றால் ஒற்றையாட்சி. தமிழில் தரப்படும் ‘ஒருமித்த’ என்ற சொல் சிங்களத்தில் ‘எக்சத்’ என்று தரப்பட்டிருக்க வேண்டும். இல்லை என்றால் தமிழில் ஒற்றையாட்சி என்று தரப்பட்டிருக்க வேண்டும். மக்களை ஏமாற்றப்பார்க்கும் இடைக்கால அறிக்கையை நான் நிராகரித்ததில் என்ன தவறு? எவ்வாறு வடகிழக்கு இணைப்பு 18 வருடங்களுக்கப் பின் இல்லாமல் ஆக்கப்பட்டதோ, இவ்வாறான இரட்டை வேடந் தாங்கி வரும் அரசியல் யாப்பை ‘ஏகிய’ என்ற ஒரு சொல்லை வைத்தே ஒற்றையாட்சி நடைமுறையில் நாடு இருந்து வருகின்றது என்று நீதிமன்றங்கள் தீர்மானித்து விடுவன. ஒற்றையாட்சி என்றால் பெரும்பான்மையினரின் ஆதிக்கம் என்று பொருள்படும். எமக்கு நேர்ந்த அரசியல் துயரங்கள் யாவும் இந்த ஆதிக்கத்தின் பிரதிபலிப்பே.

15. அரசமைப்பு புரிந்துணர்வோடு தயாரிக்கப்பட வேண்டியதொரு ஆவணம் என்று நண்பர் கூறுவதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் எந்த அளவுக்கு அவ்வாறு தயாரிக்கப்படும் அரசமைப்பு தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களையும் அபிலாஷைகளையும் நிறைவேற்றும் என்பதே கேள்வி.

நல்லிணக்கம் என்ற பெயரில் நாம் பலதையும் விட்டுக் கொடுத்து முதலில் தரப்பட்ட 13வது திருத்தச் சட்டத்திற்கு ஒப்பான ஒரு சட்டத்தை ஒற்றையாட்சியின் கீழ் உருவாக்குகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அதிகாரம் முற்றிலும் மாகாணத்திற்குப் பகிரப்படுமா, அதில் மத்தி தலையிடாதா, எமது மண்ணின் உரித்து எமக்குரியதாக்கப்படுமா இல்லையா, மத்தியின் உள்ளீடல்கள் எவ்வாறு அமையும், அதன் காரணமாக எமக்கு ஏற்படப்போகும் பாதிப்புக்கள் எவை என்பன பற்றியெல்லாம் நாம் சிந்திக்கும் போது அடிப்படை அதிகாரம் யார் கைவசம் இருக்கின்றது என்பதே முக்கியமாகக் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டியிருக்கும்.

எமது தேவைகள், நடவடிக்கைகள், எதிர்பார்ப்புக்கள் சம்பந்தமாக மத்திக்குத் தீர்மானம் எடுக்க வசதி செய்து கொடுத்தால் எமது தனித்துவம் அழிந்து விடும். எமது மண்ணும் சுற்றியுள்ள கடலும் பறிபோய்விடுவன.

16. எமது அரசியல்யாப்பு எழுத்திலான யாப்பு. பிரித்தானியாவின் யாப்பு எழுதப்படாததொன்று. அங்கு சர்வதேச எதிர்பார்ப்புக்களுக்கு, சர்வதேசச் சட்டத்திற்கு அமைய மக்கள் தமது கொள்கைகளை, நடைமுறைகளை மாற்ற முடியும். எழுத்திலான அரசியல் யாப்பு அவ்வாறான மாற்றங்களுக்கு இடங் கொடுக்காது. ஆகவே இவற்றை வைத்துக் குளப்பி அடிப்பது சட்டத்தரணிகளுக்கு கைவந்த கலையாக இருக்கலாம். யதார்த்தம் வியாக்கியானங்களுக்கு அப்பாற்பட்டதொன்று. எழுத்திலான அரசியல் யாப்பைப் பேசி மாற்ற முடியாது. அதனால் தான் எமது தனித்துவத்தைப் பேணும் முகமாக சமஷ்டி பற்றிக் கூறி வருகின்றோம்.

17. சிங்களவர் பற்றிய என் கருத்துக்கள் கடுமையானது என்கின்றார் நண்பர். ஒன்றை மறந்து விட்டார் நண்பர். பிழையான கருத்துக்களின் அடிப்படையில் தான் சிங்கள ஏகாதிபத்தியம் இன்று நாட்டை ஆள்கின்றது. அதனைச் சுட்டிக்காட்டாதீர்கள். அவர்களுக்குக் கோபம் வரும். ஒன்றும் தரமாட்டார்கள் என்கிறார். அங்கு தான் தவறு இழைக்கப்பட்டுள்ளது. பொய்மையின் அடிப்படையில் சிங்கள இனத்தின் ஆதிக்கம் நிலைநாட்டப்பட்டுள்ளது.

அதனை ஏற்று அவர்கள் தருவதை பெற்றுக் கொள்வோம் என்றால் எமக்கு என்ன கிடைக்கப் போகின்றன? இந்த நாடு சிங்கள பௌத்த நாடு, நாம் கூறுவதை மற்றைய இனங்கள் ஏற்க வேண்டும். அதற்கு அனுசரணையாக மரத்தைச் சுற்றிப்படரும் கொடிபோல் அவர்கள் வாழ வேண்டும் என்றால் காலாதி காலம் நாங்கள் பிச்சைக்காரர்களாகவே வாழ வேண்டிவரும். நினைத்த போது எமது பிச்சைப் பாத்திரத்தைக் கூடப் பறித்து விடுவார்கள். நண்பரினதும் அவருடன் சேர்ந்தவர்களினதும் அடிமை மனப்போக்கு வெளிப்படுகின்றது.

18. அடுத்து வித்துவச் செருக்கால் நாம் தருவதை ஏற்காது விட்டால் எமக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார் நண்பர். எமது அண்மைய அரசியல் வரலாறு பற்றிக் கூறியுள்ளார். அதற்காக என்ன செய்ய வேண்டும் என்கின்றார் நண்பர்? அங்கு தான் உதைக்கின்றது. எதை எதையோ பறிகொடுத்து வந்த நாங்கள் இதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கின்றார். அதாவது ஒற்றையாட்சியை ஏற்க வேண்டும், சிங்கள ஏகாதிபத்தியத்தை ஏற்க வேண்டும், பௌத்தத்திற்கு முதலிடம் கொடுக்க வேண்டும், தனித்துவத்தை நாடுவது தவறு.

சுயமாக எம்மை நாம் ஆள விழைவது தவறு என்றெல்லாம் சொல்லாமல் சொல்கின்றார். இதை ஏற்றுக் கொள்வது எனக்கு மட்டுமல்ல பல புத்திஜீவிகளுக்கும் பாமர மக்களுக்கும் கடினமாகவே இருக்கின்றது. இதைக் கூறவே தமிழ் மக்கள் பேரவை உதயமாகிற்று.

19. நடப்பியல் அறிந்து தமிழரசுக் கட்சி இன்று நடப்பதாக நண்பர் கூறுகின்றார். கூட்டாட்சி பற்றி சுமந்திரன் சிங்கள மக்களுக்கு விளக்கி வருவதைக் குறிப்பிடுகின்றார். கூட்டாச்சிக்கு வித்திடாத ஒரு செயற்றிட்டத்தை வைத்துக் கொண்டு கூட்டாட்சி பற்றிப் பேசியதாகக் கூறியது எமக்கு ஆவலை எழுப்புகின்றது. எதைச் சுமந்திரன் கூறினார் என்பது முக்கியம். அவர் சிங்கள மக்களுடன் பேசினார் என்பது ஒரு அலகே. எதைப் பேசினார் என்பது மறு அலகு. எந்த சோபிததேரர் என்பதும் குறிப்பிடப்படவில்லை. ஒருவர் காலமாகி பல மாதங்கள் ஆகிவிட்டன.

20. மற்றவர்கள் தமது தயவின் அடிப்படையில் தருவனவற்றை ஏற்று அவற்றிற்கு நன்றிக் கடன்படுபவர்களை எலும்புத் துண்டுகளைப் பெறுவனவற்றுடன் ஒப்பிட்டது ஒரு தவறாக இருக்கலாம். அவ்வாறான உயிரினங்கள் கூட தமது வாலை மிதித்துவிட்டால் சத்தம் போட்டாவது எதிர்ப்பை வெளிக் காட்டுவன. காணி பறி போகின்றது. வாழ்வாதாரங்கள் பறிபோகின்றன. வாணிபம் பறிபோகின்றது. சுற்றுலாவும் எமது வளங்களும் சுமந்து செல்லப்படுகின்றன. குடியேற்றம் யுக்தியுடன் ஈடேற்றப்படுகின்றன. காணாமல் போனோர் பற்றி கடுகளவுஞ் சிந்தனை இல்லை. பெண் தலைமைக் குடும்பங்கள் படும் பாடு பற்றி ஆராய ஆர்வமில்லை. இவற்றிற்காக ஒரு திடமான குரல் கூடக் கொடுக்காது தருவதை ஏற்போம் என்பது நண்பருக்குச் சரியாகப்படுகின்றனவா? அவரே பதில் தரட்டும் என தனது முழுமையான பதிலை முதலமைச்சர் வெளியிட்டுள்ளார்.

Previous Post

சிறையில் தன்னை யாரும் துன்புறுத்தவில்லை

Next Post

அகில இலங்கை மக்கள் காங்கிரக்கு பலப்பரீட்சையா?

Next Post
அகில இலங்கை மக்கள் காங்கிரக்கு பலப்பரீட்சையா?

அகில இலங்கை மக்கள் காங்கிரக்கு பலப்பரீட்சையா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures