இந்த அரசாங்கம் மக்களின் கருத்துக்கு மதிப்பளிப்பதாயின், இரண்டு வருடங்களை இழுத்தடிக்காமல் ஜனாதிபதித் தேர்தலையும், பாராளுமன்ற பொதுத் தேர்தலையும் ஒரே தினத்தில் நடாத்தி முடிக்க வேண்டும் என முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
நேற்று (13) சமல் ராஜபக்ஷ திஸ்ஸமஹாராமயில் வைத்து ஊடகங்களிடத்தில் இதனைக் குறிப்பிட்டார்.
மக்களின் விருப்பம் இல்லாமல் நான் பிரதமர் பதவி உட்பட எந்தவொரு பதவியையும் எடுக்க மாட்டேன். அவ்வாறின்றி, பதவியொன்றை எடுப்பதை விட வீட்டில் பாய் ஒன்றைப் போட்டு தூங்குவது சிறந்தது. மக்களின் விருப்பத்துக்குள்ள கட்சிக்கு ஆட்சியமைக்க வழியமைப்பதே இந்த தருனத்தில் ஜனாதிபதி செய்ய வேண்டிய பிரதான பணியாகும்.
நாம் எம்மிலிருந்து பிரிந்து சென்றவர்களுடனோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியுடனோ இணைந்து அரசாங்கம் ஒன்றை அமைக்க விரும்புவதில்லை. பொதுஜன பெரமுனவுக்கு வாக்களித்த மக்கள் அதனை விரும்ப மாட்டார்கள் என்பதே எமது நம்பிக்கையாகும்.
எமது அரசியல் கொள்கை வித்தியாசமானது. நாம் எவருடனும் இணைந்து ஆட்சியமைக்க மாட்டோம். எதிர்வரும் நாட்களில் தனியாக ஒரு அரசாங்கம் அமைப்போம் எனவும் சமல் ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளார்.