மக்களின் பலம் உள்ளதை நிரூபித்துள் ளோம் என்று கூறும் 70 பேர் அணி, பலத்தைக் காட்டி ஆட்சியைக் கைப்பற்றுவதை விட்டுவிட்டு, எதிர்க்கட்சிப் பதவிக்கு ஏன் போராடுகின்றார்கள்?
இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க.
எதிர்க்கட்சிப் பதவி தொடர்பில் நேற்று நாடாளுமன்றில் நடந்த விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் தெரிவித்துள்ளதாவது-எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தரக் கோரிப் பொது எதிரணியினர் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்கின்றனர். 42 உறுப்பினர்கள் இருந்தபோதும், பின்னர் 54 உறுப்பினர்கள் இருந்தபோதும் எதிர்க்கட்சிப் பதவியைக் கேட்டனர். இப்போது 70 பேர் உள்ளபோதும் எதிர்க்கட்சிப் பதவியைக் கோருகின்றனர். இவர்களின் கோரிக்கையில் எந்தவித அடிப்படை நியாயப்பாடுகளும் இல்லை.
நாடாளுமன்றில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆறு கட்சிகள் உள்ளன. அந்தக் கட்சிகளில் இருந்தே உறுப்பினர்கள் நாடாளுமன்றைப் பிரதிநிதிதுவம் செய்கின்றனர். 19ஆம் திருத்தத்துக்கு அமைய கட்சித் தன்மைகளைக் கைவிட்டுச் செயற்பட முடியாது. அவ்வாறு செயற்பாட்டால் எதிர்க்கட்சி ஒன்று இல்லாத நிலைமை தோன்றும்.
தற்போது எதிர்க்கட்சியினர் எண்ணிக்கை குறைவுதான். 3 கட்சிகளுமாகச் சேர்த்து 23 பேர்தான் உள்ளோம். நாம் பலம் குறைந்த எதிர்க்கட்சிதான். அதை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். சில சந்தர்ப்பங்களில் பலவீனமாகவே உள்ளோம். ஆனால் நாடாளுமன்ற விதிமுறைகளுக்கு ஏற்ப தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரதான எதிர்க்கட்சியாகச் செயற்பட முடியாது என்று ஒருபோதும் கூற முடியாது.
பொது எதிரணியினர் தமக்குத்தான் மக்கள் பலம் உள்ளது என்கிறார்கள். 70 பேர் எதிர்க்கட்சியாக உள்ளனர் என்கின்றனர். முன்னாள் அரச தலைவர் ஒருவரும் இருக்கின்றார். அனுபவம் மிக்க தலைவர்கள் உள்ளார்கள் என்கிறீர்கள். இத்தனை பேசும் 70 பேர் ஏன் 23 பேரைக் கண்டு அஞ்ச வேண்டும்.
உங்கள் பலத்தைக் காட்டி அரசை விட்டு வெளியேறி எதிர்க்கட்சியில் அமர்ந்து கொண்டு ஆட்சியைக் கைப்பற்ற முடியுமே?. அதை விடுத்து ஏன் 23 பேர் உள்ள அணியில் தஞ்சம் புகுந்து செயற்பட வேண்டும்?.- என்றார்.