முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது தம்பியும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச ஆகியோரைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்றுத் திடீரெனச் சந் தித்துப் பேசினார்.
புதிய அரசமைப்பு முதல் வரைவு முன்வைக்கப்பட்ட உடனேயே அதற்கு மகிந்த அணி நாடாளு மன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப் புத் தெரிவித்த நிலையில் இந்தச் சந்திப்புத் திடீரென நிகழ்ந்துள்ளது.
இலங்கையிலுள்ள சீனத் தூதரகத்தினால், சீன இராணுவத்தின் 91ஆவது சம்மேளன நிகழ்வு கொழும்பு சங்கிரிலா ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்கு வருகை தந்தபோதே இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.புதிய அரசமைப்பு உருவாக்குவதற்கான வழிநடத்தல் குழுக் கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. அங்கு அரசமைப்பு வரைவுக்கான நகல், நிபுணர் குழுவினால் முன்வைக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பில் மகிந்த அணியினரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணியினரும், நாடாளுமன்றத்தில் சர்ச்சையைக் கிளப்பியிருந்தனர்.
திருட்டுத்தனமான புதிய அரசமைப்பை நிறைவேற்றுவதற்கு முயற்சிக்கப்படுவதாகவும் குற்றம் சுமத்தியிருந்தனர்.
இவ்வாறானதொரு நிலையிலேயே சம்பந்தனுக்கும், மகிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றுள்ளது.
புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சி தொடர்பில், மகிந்தவுடன் சம்பந்தன் பேச்சு நடத்துவார் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இந்த மாத ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் இதுவரையில் அந்தச் சந்திப்பு நடைபெறாத நிலையில் நேற்றை சந்திப்புத் திடீரென நடந்துள்து.
சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் குறித்த உத்தியோகபூர்வமான தகவல்கள் எவையும் வெளியிடப்படவில்லை.
எனினும் இந்தச் சந்திப்பில் புதிய அரசமைப்புக்கு மகிந்தவின் ஆதரவை சம்பந்தன் கோரினார் என்று தெரிவிக்கப்பட்டது.

