2015ஆம் ஆண்டு அரச தலைவர் தேர்தல் காலத்தில் சுயாதீனத் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய நிதித் தொகையைச் செலுத்தாமை தொடர்பில் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட தரப்பினருக்கும் ரத்னாலங்கா மற்றும் அவன்காட் நிறுவனங்கள் தொடர்பான கொடுக்கல் வாங்கல் விடயங்களில் இடம்பெற்ற நிதி மோசடி குறித்து முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபாய ராஜபக்ச உள்ளிட்ட தரப்பினருக்கும் எதிராகக் குற்றவியல் வழக்குத் தொடரப்பட வேண்டும் என்று ஊழல் மோசடி தொடர்பான அரச தலைவர் விசாரணை ஆணைக்குழு தனது அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஊழல் மோடிகள் சம்பந்தமான 34 தொகுதிகள் அடங்கிய விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு பரிந்துரைக்கப்பட் டுள்ளது.
விசாரணை அறிக்கையில் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, பிரியங்கர ஜெயரத்ன, பசில் ராஜபக்ச, மகிந்தானந்த அளுத்கமகே, சரத்குமார குணரத்ன, மகிந்த யாப்பா அபேவர்த்தன ஆகியோருக்கு எதிராகவும் நிதி அமைச்சின் முன்னாள் செயலர் பி.பி.ஜெயசுந்தரவுக்கு எதிராகவும் மாகாண சபையை பிரதிதித்துவப்படுத்தும் தனசிறி அமரதுங்க ரேணுக பெரேரா, அரச அதிகாரிகளான சுயாத்தா தமயந்தி, நிசாந்த வீரதுங்க, பிரியாத் பந்து உள்ளிட்ட பலருக்கு எதிராகச் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்குமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் துறைமுக அதிகாரசபையில் இடம்பெற்ற நிதிமோசடி சம்பந்தமாக முன்னாள் அமைச்சர் சரத்குமார குனரத்ன உள்ளிட்ட ஐவருக்கு எதிராகக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.